146
சில விதைகள் அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்து மண் ஆழமில்லாததினாலே, உடனே முளைத்தன.
ஆயினும் சூரியன் எழும்பவே, அவைகள் எரிந்து, வேரில்லாமையால், உலர்ந்துபோயின.
சில விதைகள் முள்ளுகள் நடுவே விழவே, முள்ளுகள் எழும்பி, அவைகளை நெருக்கிப் போட்டன.
வேறு சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து, ஒன்றுக்குச் சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலனைத் தந்தது.நீண்ட நேரம், இந்தப் பகுதியைப் பற்றிச் சிந்தித்து, சிந்திக்கச் சிந்திக்க கருத்துச்சுவை கிடைக்கப்பெற்று, மகிழ்ந்தேன்.
நண்பர் அன்பழகனுடன், இதுபற்றி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.
பொதுவாக, மார்க்கங்கள், தூய்மைப்படுத்தும் இயக்கங்கள் மலரும்போது, அந்த இடங்களிலும், நாட்களிலும் நெளிந்துகொண்டுள்ள அக்ரமங்களை ஒழித்திடும் விதமாக ஆற்றல் பெறுகின்றன; தூய்மையும் வாய்மையும் கனிகின்றன; கெடுமதியும் கொடுஞ்செயலும் அழிந்து படுகின்றன, நன்னெறியும் நல்லறிவும் அரசோச்ச வருகின்றன, இருள் அகலுகிறது, இழிவு துடைக்கப்படுகிறது, வெற்றிகிட்டுகிறது, மனித குலத்துக்கு மேம்பாடு கிடைக்கிறது.
ஆனால், அக்ரமத்தை ஒழிப்பதிலே வெற்றி பெற்ற இயக்கங்கள், மீண்டும் அதுபோன்ற அக்ரமங்கள் எழ முடியாத நிலையை நிலைத்திடச் செய்ய முடிவதில்லை. தூய்மைப்படுத்தப்பட்ட இடம் மீண்டும் பாழ்படுகிறது; அரசோச்ச முற்பட்ட வாய்மை மீண்டும் வாட்டி வதைக்கப்படுகிறது. கொடுமைகள் புதிய வடிவில் கொக்கரித்துக் கிளம்புகின்றன.