162
முன்பெல்லாம் பாடுவேன் வீட்டில்—சிறுவனாக இருந்தபோது—அதனால் அண்டைப் பக்கம் உள்ளவர்கள் பொறுத்துக் கொண்டார்கள். இப்போதாவது பாடுவதாவது, ஆனால் உள்ளபடி பாடத் தெரிந்திருந்தால் மிக நன்றாகத்தான் இருக்கும். காலம் ஆமையாகிவிடும் இடம் சிறை. பாடத்தெரிந்து, பாடியபடி இருந்தால், நமக்கும் மகிழ்ச்சி, கேட்பவர்களுக்கும் மகிழ்ச்சி.
இங்கு எனக்குப் பாடத் தெரியாதது போலவே தான் மற்றவர்களுக்கும்
அரக்கோணம் ராமசாமி மட்டும் பாடுகிறார்—பாடத் தெரிந்தவர் என்று கூறவில்லை—பாடுகிறார் அவருக்கு ஒரே ஒரு ரசிகர்—மதியழகன். ஆனால் அதிக நேரம் பாடுவதில்லை—நல்லவர்—சீக்கிரமாகவே தூங்கி விடுகிறார்.
இங்கே, நண்பர்களில் ஒருவருக்கும் உடல் நலம் கெடவில்லை—சிறு கோளாறுகள் மட்டுமே ஏற்படுகின்றன.
மாலை வேளையில் உலவிட வசதியாக இருக்கிறது—இந்தப் பகுதிக்கு வந்த பிறகு. முன்பு இருந்த பகுதியில் அந்த வசதி இல்லை என்றாலும், நான் அப்போதும், என் அறைக்குள்ளாகவே உலாவுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தேன். நான் மருத்துவமனையில் தங்கி இருந்தபோது அன்பர் ம.பொ. சிவஞானம் கூறிய யோசனை அது. உடல்நலம் பெற, உலவுவது மிகத் துணை செய்யும் என்று கூறினார், உண்மைதான்.
மருத்துவ மனையில் மருந்து ஏதும் பெறாமலேயேதானே, சிறை திரும்பினேன். சிறையிலே, உடலுக்கு மட்டுமின்றி உள்ளத்துக்கு வலிவும் களிப்பும் தரத்தக்க 'டானிக்' கிடைத்தது. நெல்லை, தாராபுரம், அரக்கோணம் ஆகிய இடங்களில் கிடைத்த வெற்றி பற்றிய செய்திகள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, நண்பர் ராமசாமியிடம் கடிந்து கொண்டேன்—அரக்கோணம் தேர்தல் சம்பந்தமாக மேலும் சிறிதளவு அக்கறை செலுத்தியிருக்க வேண்டுமென்று ஆம் என்று கூறி வருத்தப்பட்டார். நகராட்சி மன்றத் தலைவர் தேர்தலில், கழக ஆதரவு பெற்றவர்