பக்கம்:கைதி எண் 6342.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

169

முறையிலே அமைந்துவிட்டிருக்கிறது—என்றாலும், அனுமதிக்கப்படும் அளவுக்கு புதிய நாடகங்கள் தயாரித்து நடத்தவேண்டும் என்று பேசிக் கொண்டோம்.

மாநகராட்சி மன்றத் தேர்தலின்போது மறைந்த நகைச்சுவை மன்னர் என். எஸ். கே. கிருஷ்ணனின் திருமகன் என். எஸ். கே. கோலப்பன் நடத்திய 'வில்லுப் பாட்டு' மிக்க சுவையும் பயனும் அளித்ததாக நண்பர்கள் கூறினார்கள். நான் இரண்டொரு முறை கேட்டிருக்கிறேன், சுவையாகவே இருக்கிறது—தந்தையின் "பாணி" அப்படியே அமைந்திருக்கிறது என்று கூறினேன்.

திங்கட்கிழமை பரிமளம் வரக்கூடும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்—வரவில்லை.

செவ்வாய் மாலையில், பரிமளம், இளங்கோவன், கே.ஆர். ராமசாமி வந்திருந்தனர். மூவருக்குமேல் அனுமதிக்கப்படுவதில்லை; அதனால் என்னைக் காண வந்திருந்த அடிகள், வெளியிலேயே நிறுத்தப்பட்டு விட்டார் என்று கூறினார்கள். வீட்டிலுள்ளோரின் நலன் பற்றியும், பொது விஷயங்கள் குறித்தும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

திரு. மா. சண்முக சுப்பிரமணியம் அவர்கள் எழுதிசைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் வெளியிட்ட "தீங்கியல் சட்டம்" என்ற நூலை, அன்பர் சுப்பைய்யா அவர்கள் தந்தனுப்பியதாகக் கூறி, அந்த புத்தகத்தைப் பரிமளம் தந்தான். பத்திரிகையில் அந்தப் புத்தகம் பற்றிப் படித்ததிலிருந்து அதைப் படிக்கவேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தேன். நான் எதிர்பாராமலேயே அந்தப் புத்தகம் கிடைத்திருக்கிறது. மெத்த மகிழ்ச்சி.

நண்பர்கள், டில்லி பாராளு மன்ற நடவடிக்கைகள் குறித்து மெத்த ஆவலுடன் என்னிடம் கேட்டறிந்தார்கள். அடுத்த முறை, அதிக அளவில், பாராளுமன்றத் தேர்தலில், நமது கழகம் ஈடுபட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

கை.—11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/169&oldid=1584434" இலிருந்து மீள்விக்கப்பட்டது