பக்கம்:கைதி எண் 6342.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

இருந்தது—பேச்சாகவே போய்விட்டது—வரக்காணோம். மேயர், கழக ஆதரவு பெற்றவர் என்று தெரிந்து கொண்ட 'கைதிகள்', மேயர் வரப்போகிறார் என்று அறிந்ததும், எங்களிடம் புதிய தனி மரியாதை காட்டினார்கள்.

சட்டமன்றத்தில், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜாகீர் உசேன் அவர்கள், திருவள்ளுவர் திரு உருவப்படத்தைத் திறந்துவைத்த செய்தியும், அந்த நிகழ்ச்சிபற்றிய படங்களும் இதழ்களில் வெளிவந்திருக்கக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். இத்தனை காலத்துக்குப் பிறகாகிலும், வள்ளுவருக்கு ஆட்சி மன்றத்திலே 'இடம்' தந்து பெருமை தேடிக்கொள்ள முடிந்ததே என்பதிலே மகிழ்ச்சி. வெளியில் இருந்திருந்தால் இந்த நாளை ஒரு திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்று கூறியிருப்பேன், அப்படி ஒரு எண்ணம் இருந்தது. சிறைக்கு உள்ளே இருந்துதான், அந்தச் சிறப்பான நிகழ்ச்சி பற்றி மகிழ முடிந்தது. வள்ளுவரின் திரு உருவப்படம், இந்த ஆட்சி மன்றத்தில் மட்டுமல்ல, உலக நாடுகளின் பெருமன்றத்திலேயே இடம் பெறத்தக்கது.

தென்னக வரலாற்றிலே ஒரு கட்டம் பற்றி சோவியத் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய நூல் வெளியிட்டிருக்கிறார்கள் என்ற செய்தியைப் பார்த்தேன்.

இன்று 'நூற்பு வேலை' செய்யவில்லை—கதர் திட்டத்தின் பயனற்ற தன்மைபற்றி, மாறன் முரசொலியில் தலையங்கம் எழுதியிருந்ததைப் படித்தோம்—ஆனால் அதனால் அல்ல 'நூற்பு வேலை' நடைபெறாதிருந்தது; பஞ்சு தரப்படவில்லை.

அறப்போரில் ஈடுபட்டு இங்கு உள்ள தோழர்களில் இருவருக்கு உடல் நலமில்லை—சிறையில் உள்ள மருத்துவ மனையில் உள்ளனர். அவர்களைப் பொன்னுவேல் பார்த்து வரும் வாய்ப்பு கிடைத்ததால், செய்தி அறிந்து கொள்ள முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/172&oldid=1651228" இலிருந்து மீள்விக்கப்பட்டது