பக்கம்:கைதி எண் 6342.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

177

முற்காலத்திலே இருந்ததைவிடச் சிறை எவ்வளவோ மேல் இப்போது என்று அமைச்சர்கள் பேசியிருக்கிறார்கள்—அதுபற்றி இங்கு நண்பர்கள் விவாதித்தனர். விளக்கொளி, உடை, அலுமினிய பாத்திரம், காற்றோட்டத்துக்கான வழி, இவைகளெல்லாம் இப்போது உள்ளன; முன்பு இருட்டு, மண்பாண்டம், அழுக்குடை, குகைபோன்ற அமைப்பு இவை இருந்தன; இது முன்னேற்றமல்லவா என்று அமைச்சர்கள் கேட்கிறார்கள்.

அவர்கள் குறிப்பிடும் நிலைமை சிறையிலே இருந்த நாட்களில், வெளியிலேயே இருட்டும் இடர்ப்பாடும் மிகுந்திருந்தன; அதனுடைய மறு பதிப்பாகச் சிறை இருந்தது. இப்போது, வெளியே அமைந்துள்ள வாழ்க்கை முறையில், ஒளியும் காற்றும், தூய்மையும் துப்புரவும் புகுத்தப்பட்டு விட்டிருக்கிறது; ஆகவே அதனுடைய சாயல், சிறையிலும் இருக்க வேண்டும்—இதனை அமைச்சர்கள் மறந்துவிடுகிறார்கள். முன் பீப்பாயில் போட்டு உருட்டுவது, சுண்ணாம்புக்காளவாயில் போட்டு வேகவைப்பது. கழுமரத்தில் ஏற்றுவது, மாறுகால் மாறுகை வாங்கிவிடுவது, யானை காலில் இடர வைப்பது, இப்படிக் கொடுமைப்படுத்தும் முறைகள் நிரம்ப இருந்தன! அந்தக் காலத்தைத்தான் காட்டு மிராண்டிகள் காலம் என்கிறோம். அவைகளைக் கவனப்படுத்தி அவைகளைவிட, கசையடி பரவாயில்லை அல்லவா, கை காலுக்கு விலங்கிடுதல் பரவாயில்லை அல்லவா என்று கேட்பது, வாதமுமாகாது; மனிதத்தன்மையின் மேம்பாட்டை வளர்க்கும் வழியுமாகாது. சிறை கொடுமைப்படுத்த உள்ள இடம் என்ற கொள்கை, காட்டுமிராண்டித்தனத்தின் ஒரு கூறு. திருத்துவதற்கான் இடம் சிறை என்பதுதான் நாகரிக நாட்டினர் ஒப்புக்கொண்டுள்ள கருத்து. இந்தக் கருத்தை இங்குள்ள அரசு ஒப்புக்கொள்கிறதா மறுக்கிறதா என்பதுதான் பிரச்சினை. நமது கழகத் தோழர்கள் சட்டமன்றத்தில் இதனை எழுப்பினார்கள்—அமைச்சர் அவையினர் பொருத்தமான பதிலோ, விளக்கமோ, தரவில்லை. பல்வேறு குற்றங்களை இழைத்துவிட்டு வந்தவர்கள், இதே காங்கிரஸ்காரர்கள் ஜெயிலில் இருந்தபோது, என்னென்ன ஆர்ப்பாட்டம் செய்தார்கள்? சிறையை அப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/177&oldid=1584481" இலிருந்து மீள்விக்கப்பட்டது