191
சட்ட சம்பந்தமான பிரச்சினையுள்ள வழக்கை, சுப்ரீம் கோட்டுக்குக் கொண்டு செல்வது பலனளிக்கும் என்று கூறினார். இப்போதைக்கு வேண்டாம்— பிறகு ஒரு வாய்ப்பு ஏற்படும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி அனுப்பினேன்.
மாலையில் ராணியுடன், அ. க. தங்கவேலரும், என்.வி.நடராசனும் வந்திருந்தனர். நகராட்சிமன்றத் தலைவரான பிறகு, முதன்முறையாக அ. க. தங்கவேலரைப் பார்க்கும் வாய்ப்பு. மகிழ்ச்சியாகவே காணப்பட்டார். எம். எல். சி ஆகிவிட்ட, என். வி. நடராசனிடம் ஒன்றும் மெருகு—முடுக்கு—காணோம்.
காஞ்சிபுரத்தில் அம்மா, அக்கா, கௌதமன், பாபு, என் மருமகப்பெண்கள் எல்லோரும் நலமாக இருக்கும் செய்தி, ராணி மூலம் கேட்டு மகிழ்ந்தேன். பரிமளத்துக்குப் பரீட்சை சமயம், அதனால்தான் வரவில்லை என்றார்கள். படிப்பதற்குப் புத்தகங்கள் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்தேன்—கொண்டுவரவில்லை.
கைவலிக்கு அன்பழகன், கடுகு எண்ணெய் தடவினால் நல்லது என்று சொல்லி, வீட்டிலிருந்து வரவழைத்திருந்தார். அந்த எண்ணெயை இன்றிரவு தடவிக் கொண்டேன்—இரண்டொரு வாரங்கள் தொடர்ந்து—தடவினால்தான் பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
இன்று பிற்பகல் அன்பழகனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, முதல் இந்தி எதிர்ப்புப் போர்க் காலத்தில், மிக்க ஆர்வத்தோடு பங்குகொண்ட மறை. திருநாவுக்கரசு இப்போது முற்றிலும் மாறிவிட்டிருப்பதாகச் சொன்னார். மறைமலை அடிகளாரின் திருமகன் திருநாவுக்கரசு. இன்றைக்கும், மறைமலை அடிகள் எழுதிய, 'இந்தி பொது மொழியா?' என்ற ஏடு, எவரும் மறுக்கொணாததாக இருக்கிறது. ஆனால் மகன், மாறிவிட்டிருக்கிறாராம். எனக்கு மிக நெருக்கமான நண்பர். இப்போது 'மறை' தூத்துக்குடிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார் என்று அறிகிறேன். கருத்திலே காரணத்துடனோ—காரணமற்றோ—மாறுதல் ஏற்பட்டுவிட்டிருப்-