பக்கம்:கைதி எண் 6342.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

உலகத் தொடர்புக்கு அம்மொழி மிகமிகத் தேவை என்பதையும் வலியுறுத்தி எழுதிக்கொண்டு வருகின்றன. அந்தப் 'புதிய திருப்பம்' காரணமாகவோ என்னவோ; ஆங்கிலப் பெருங்கவிஞரின் நினைவுநாள் குறித்து இதழ்கள் நிரம்ப அக்கறை காட்டி, பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.

டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் எவ்வளவோ பரவாயில்லை; அடித்துப் பேசி இருக்கிறார்; "இந்தி ஆட்சிமொழியாக இரண்டு தலைமுறைகவாவது பிடிக்கும்; அறுபது ஆண்டுகள் ஆகும்;" என்று பேசி இருக்கிறார்; இந்த அளவுக்குக் கூடத் துணிவில்லையே நமது முதலமைச்சர் பக்தவத்சலத்திற்கு என்று பொன்னுவேலுவும் மற்றவர்களும் குறைப்பட்டுக் கொண்டார்கள். உண்மைதான்! டி.டி.கே. துணிவுடன் பேசுகிறார்: ஆனால் அதேபோது, இது என்னுடைய சொந்தக் கருத்து என்று கூறி இருக்கிறார். அதனை மறந்துவிடக்கூடாது! கட்சி இந்தி ஆதிக்கத்திற்கு முனைகிறது என்று உணரும்போது, இந்தி ஆதிக்கம் கூடாது, தேவையில்லை, என்று உள்ளூரக் கருதுபவர்கள், அந்த போக்கை எதிர்த்து வெளியே வந்து பணியாற்ற வேண்டுமேயன்றி, கூடிக் குலவிக்கொண்டே, 'என்னுடைய சொந்தக்கருத்து, இந்திகூடாது என்பதுதான்' என்று பேசுவதிலே, நேர்மையோ, தக்க பலனோ என்ன இருக்கமுடியும் என்று கேட்டேன். 'ஏன் சிலர் அப்படி இருக்கிறார்கள்' என்று நண்பர்கள் கேட்டனர். பதவியின் சுவை ஒரு காரணம்; மற்றோர் காரணம், இந்தியை ஆட்சிமொழி ஆக்குவதில் வெற்றி காணமுடியாது என்று ஒரு நம்பிக்கை; மற்றோர் காரணம். நம்முடைய காலம் வரையில் ஆங்கிலம் இருக்கும்; பிறகு எப்படியோ ஆகிவிட்டுப் போகட்டும் என்ற பொறுப்புணராத தன்மை; இவைகளே சிலருடைய போக்குக்குக் காரணம் என்று குறிப்பிட்டேன்.

இன்று, ஜெயப்பிரகாஷ் நாராயணன் 1944-ல் லாகூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டபோது, எழுதிய நினைவு நிகழ்ச்சிக் குறிப்புகள் பற்றிய புத்தகம் படித்தேன். இதிலே பெரும்பகுதி, பாகிஸ்தான் பிரச்சினை பற்றிய ஜெயப்பிரகாசருடைய கருத்தே நிரம்பி இருக்கிறது. அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/226&oldid=1592443" இலிருந்து மீள்விக்கப்பட்டது