232
என்று நான் கூறினேன்—அவரும் சிரித்துக்கொண்டு, 'ஆமாம்', என்றார். சேலம் சிறை, திரும்பத் திரும்பச் சிறைப்படும் கைதிகள் நிரம்பிய இடம். பல முறை சிறைக்கு வருபவர்களை, கருப்புக் குல்லாய் என்பார்கள்.
இன்று மெயில் பத்திரிகையில் ஒரு செய்தி பார்த்து, ஒரு கணம் பதறிப் போனேன்; இந்தி எதிர்ப்பு அறப்போரினை நான் வெளியே வந்ததும். நிறுத்திவிட எண்ணுவதாகவும், என்னை வந்து பார்த்த முக்கியமான நண்பர்கள் சிலரிடம் இதுபோல நான் சொல்லி அனுப்பியதாகவும், மெயிலில் சேதி வந்திருந்தது. நான் நினைத்துக்கூடப் பார்த்திராத ஒன்றை, இப்படித் துணிந்து, மெயில் இதழ் வெளியிடுவது கண்டு நான் பதறிப்போனேன். இவ்விதமான பத்திரிகைத் தாக்குதல்களிவிருந்து தப்பிப் பிழைத்து, இந்த அளவு வளர்ந்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, பெருமிதம் எழத்தான் செய்கிறது. 'அண்ணா! இந்தப் பத்திரிகைகளில் வெளிவருவதை நமது தோழர்கள் நம்பமாட்டார்கள்; ஏனெனில். நீங்கள் தான் முன்பே சொல்லிவிட்டிருக்கிறீர்களே. இந்தி எதிர்ப்பு அறப்போர் சம்பந்தமாக, நம்நாடு, முரசொலி எனும் ஏடுகளில் வருவதைத் தவிர மற்று எதனையும் நம்பவேண்டாம் என்று' என்று அரக்கோணம் ராமசாமி கூறினார். அவர் சொன்னது போலவே, நமது கழகத் தோழர்கள் பத்திரிகைகள் இட்டுக் கட்டி வெளியிடுபவைகளை நம்பமாட்டார்கள் என்ற உறுதி எனக்கும் இருக்கிறது என்றாலும், பத்திரிகைகள் திட்டமிட்டு இந்தக் காரியத்தை செய்து வருவது பற்றி மிகுந்த கவலை எழத்தான் செய்கிறது; கழகத்துக்கு ஊறு தேடுகிறார்களே என்பதல்ல எனக்குள்ள கவலை, ஜனநாயக முறை வெற்றி பெறுவதைக் குந்தகப்படுத்துகிறார்களே என்பதுதான். இதே நாட்டிலே இனி ஒரே கட்சி ஆட்சிதான் என்று அறிவித்து விட்டால்கூட நிலைமை எத்துணையோ நல்லதாக இருக்கும்; ஜனநாயகம், எதிர்க்கட்சி: பொதுத்தேர்தல்; பேச்சுரிமை என்று உதட்டளவில் கூறிக்கொண்டு, செயலில், எதிர்க் கட்சிகளே வளரமுடியாதபடி நடந்துகொண்டு வரும் போக்குதான், மிகவும் ஆபத்தானது. இது குறித்து நண்பர்களுடன் இன்று பேசிக்கொண்டிருந்தேன்.