240
பிரிந்து வந்து, புதிய அமைப்பு துவக்கி, அதனை ஏற்றமடையச் செய்வதிலே வெற்றிபெற்றோம். அதுபோலவே, நமது அமைப்பிலிருந்து சிலர் விலகினார்கள்—விசாரப்பட்டோம். ஆனால் விரோதத்தைக் கக்கிக்கொண்டிருப்பதிலேயே, காலத்தை பழாக்கிக்கொள்ளவில்லை—நிதானம் இழக்காமல், நெறிதவறாமல், பணியாற்றிவந்தோம். நமது அமைப்பு, புதிய வடிவுடனும் பொலிவுடனும் இன்று இயங்குகிறது.
ஆக, இரு வெவ்வேறான நிலைமைகளிலும், நாம் நம்முடைய தூய்மை நோக்கத்தின் காரணமாகவும், தொண்டின் நேர்த்திகாரணமாகவும், வெற்றி பெற்றோம்.
திராவிட கழகத்திலிருந்து நாம் பிரியும்போது, நமக்கு இருந்த நிலைமை நமக்கும் நாட்டுக்குப் புரியும். கழகத்தின் நிர்வாகத்தில் ஒரு நகராட்சிகூடக் கிடையாது. தி. மு. கழக மாக வளர்ந்து, சட்டசபையில் 15-இடங்கள், பாராளு மன்றத்தில் இரண்டு இடங்கள், சென்னை மாநகராட்சி நிர்வாகம் எனும் இவைகளைப் பெற்றோம். நாங்கள் தான் உண்மையான திராடவிர்கழகம் என்ற வம்பு வல்லடியில் ஈடுபட்டிருந்தால் என்ன கிடைத்திருக்கும், வளர்ச்சி எந்த முறையில் இருந்திருக்கும் என்பதை, நான் சொல்லத் தேவை இல்லை.
திராவிட முன்னேற்றக் கழக வெற்றி, திராவிடர் கழகத்தை முறையாக நெறியாக நடத்தினால், எத்தகைய அரசியல் நிலைமை உருவாகி இருக்கும் என்பதை, அரசியல் அறிந்த அனைவரும் அறிந்து கொள்ளச்செய்தது. நிதானத்துடனும், பொறுமையுடனும், பொறுப்புடனும் செயலாற்றுவதற்குப் பலன் கிடைத்தே தீரும் என்ற பாடத்தைப் பலரும் பெறச்செய்தது.
திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து சிலர் பிரிந்து போயினர்—திட்டமிட்ட விளம்பர பலத்துடன் புதிய அமைப்பு கண்டனர் வழக்கம்போல, தி. மு. கழகத்தின் முதுகெலும்பு முறிந்துவிட்டது, ஜீவன் போய்விட்டது, என்று பத்திரிகைகள் பாடிவிட்டன. நாமோ, பகைக்காமல், பதறாமல், வியர்வையைப் பொழிந்து பணியாற்றினோம்;