250
யும், விபரீதமான போக்கினையும் ஒழித்துக் கட்டும் வழி என்று கூறினேன். நண்பர்களின் கண்கள், அடுத்து வர இருக்கும் பொதுத் தேர்தலின்மீது பாய்ந்திடக் கண்டேன். விழிப்புடன் இருக்கிறார்கள், உறுதியுடன் இருக்கிறார்கள், என்ற எண்ணம் இனிப்பளித்தது.
5—5—64
ஓவியம் வரைவதிலே, மற்ற இரு நண்பர்களும் அக்கறை இழந்துவிட்டனர்; நானோ தொடர்ந்து அதிலே விருப்பம்கொள்கிறேன். இரவு வெகுநேரம் வரையில், வண்ணங்களைக் கலப்பதும், எதை எதையோ வரைவதும். மனதுக்குப் புதுவிதமான மகிழ்ச்சி தரத்தான் செய்கிறது. நண்பர்கள் என்னை மகிழச் செய்வதற்காக, ஓவியம் நன்றாக இருக்கிறது என்று கூறுகிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது; கண் இல்லையா காண! ஓவியம் வரையத் தெரியாவிட்டாலும், வண்ணங்களைக் குழைத்து எதையாவது வடிவமெடுக்கச் செய்யும்போது களிப்பு எழுகிறது. ஓவியக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள், அந்தக் கலையில் எத்துணை இனிமை காணமுடியும் என்பதனை உணர இது ஒரு வாய்ப்பு. மலையும் மடுவும், மாவும் பலாவும், காலைக் கதிரவனும் மாலை மதியமும், கோட்டைகொத்தளங்களும் கொடி படர்ந்த குடிலும், வாளேந்திய வீரனும் வேல்விழியாளும், பாசம் நிறைந்த பார்வையும் பகை கக்கும் விழிகளும், மழலைமொழிக் குழவியும் பெருமிதமிகு தாயும், இன்னோரன்ன பிற காட்சிகளைத் தமது கைவண்ணத்தால் ஓவியர்கள் உயிர்பெறச் செய்யும்போது, தனித்தன்மை வாய்ந்த ஓர் மகிழ்ச்சி பிறக்கத்தான் செய்யும். ஓவியக் கலையினர் குறித்து, நான் படித்திருந்த சிறு கதைகள், நெடுங்கதைகள் பலவும் இந்த நேரம் என் நினைவிற்கு வருகின்றன.
இன்றுகூட, உட்அவுஸ் என்பவர் எழுதியுள்ள ஒரு கதைத் தொகுப்பில் ஓவியம்பற்றிய தொடர்புடைய சிறு கதை ஒன்று படித்தேன். ஓவியம் வரைவதிலே விருப்பம் மிகுந்திருந்த வேளை—எனவே, அந்தச் சிறு கதை எனக்கு அதிக அளவு சுவை அளித்தது.