பக்கம்:கைதி எண் 6342.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

251

ஓவியம், நூல் எழுதுதல், இசைபயிலுதல், நடனம் போன்ற நுண்கலைகளில் பெரிதும் நாட்டம்கொண்டு, ஆண்டுக் கணக்கில் ஈடுபட்டு, வறுமையால் தாக்கப்பட்ட போதிலும், உலகம் பாராட்டத்தக்க கலைத்திறனை ஒரு நாள் இல்லாவிட்டால் மற்றோர் நாள் பெறத்தான் போகிறோம், பொன்னும் பொருளும் வந்து குவியத்தான் போகிறது என்ற நம்பிக்கையின் துணையுடன் உழல்பவர்களைக் குறித்து, நம் நாட்டில் உள்ளவற்றினைவிட, மேனாடுகளில் அதிக அளவுள்ள கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளிவந்துள்ளன.

உட்அவுஸ், நகைச்சுவை ததும்பும் எழுத்தோவியம் புனைபவர்—வாழ்க்கைச் சிக்கல், பிரச்சினைகள் ஒன்றோடொன்று மோதிப் போரிடுதல் போன்றவைகளைவிட, அசட்டுத்தனம், போலிகளில் மதிப்புவைத்திடும் பான்மை, மேட்டுக்குடியினரின் மேனாமினுக்கித் தன்மை, போன்றவைகளைப்பற்றி அதிகச் சுவையுடன் எழுதுபவர்—எனினும் அந்த எழுத்தோவியத்தில் வெறும் நகைச்சுவை மட்டுமல்ல, இழையோடுவதுபோல நல்ல கருத்தும் இருக்கும்.

ஒரு வீட்டின் மாடி அறையில் ஒருவன் குடி இருக்கிறான்; கீழ் அறையில் ஒரு பெண் குடி இருக்கிறாள்; வீட்டின் மற்றமற்றப் பகுதிகளிலும் இதுபோலப் பலர் குடி இருக்கிறார்கள். வாடகை வீடு.

கீழ்த்தளத்தில் குடி இருக்கும் பெண், இசைத்துறையில் வெற்றிபெற விரும்பி வெகுபாடுபடுபவள்; பாடல்கள் புனைகிறாள், பாடிப்பார்க்கிறாள். இசைக் கருவியின் துணையைச் சேர்த்து சுவை எங்கனம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முனைகிறாள். சிலருக்கு இசைப்பயிற்சி அளிப்பதிலே கிடைக்கும் சொற்ப ஊதியத்தை வைத்துக் கொண்டு, புன்னகை தரும் பொற்காலம் வரப்போகிறது என்று காத்துக்கொண்டிருக்கிறாள்.

மாடி அறையில் குடி இருப்பவன், இந்தப் பெண்ணுடைய இசை ஈடுபாட்டைக் கலைப்பதுபோல, அறையின் தரையில் தட்டி ஒலி எழுப்புகிறான். அவளோ இசை நுணுக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, தான் புனை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/251&oldid=1592722" இலிருந்து மீள்விக்கப்பட்டது