பக்கம்:கைதி எண் 6342.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

253

"அப்படியா? இப்போது உங்களுடைய பாடலை எந்த இசைவாணனும் வாங்கவில்லையா?"

"இல்லையே! ஒரு பாடல் வெளியிடப் பட்டிருக்கிறது. அதற்கே ஏகப்பட்ட பணச் செலவு?"

"யாருக்குப் பணச் செலவு?"

"எனக்குத்தான். நான் பணம் கொடுத்து வெளியிட்டது தானே. பலரும் வாங்கினால், செலவழித்த பணமும் வரும், வருவாயும் கிடைக் கும். அதுசரி, நீங்கள் என்ன...?"

"நானா? நான் ஒரு ஓவியன்.. அதாவது ஓவியம் வரைகிறேன்... வரைந்து வரைந்து திறமைபெற்றால் ஓவியனாகலாம் அல்லவா?"

"ஓவியமா! எனக்கு நிரம்பவிருப்பம் ஓவியம் காண. என்ன வரைந்திருக்கிறீர்கள்?"

அவன் தான் வரைந்திருந்த ஓவியத்தைக் காட்டினான்—ஒரு பூனையை குழந்தை தூக்கிவைத்துக் கொண்டிருக்கும் காட்சி. அந்த ஓவியம் மிக நன்றாக இருப்பதாக அவள் கூறினாள்; அவளுடைய இசைப்புலமையை அவன் புகழ்ந்தான். உலகமோ, இருவருடைய கலையையும் கண்ணெடுத்துப் பார்க்க மறுத்தது. அவர்கள் இருவரும் கண்படைத்த காரணத்தால், ஒருவர் கலையை மற்றவர் புகழ முடிந்தது; அதற்குக் காரணம், ஒருவர் உள்ளத்தில் மற்றவர் இடம் பெற்றதுதான்.

அதே வீட்டில் மற்றோர் அறையில் மற்றோர் ஓவியன் திறமை மிக்கவன் என்ற நினைப்பு கொண்டவன்; நிலை சாதாரணம்தான்.

அவன், பூனையும் குழந்தையும் என்ற ஓவியத்தைப் பார்த்துவிட்டு, ஏளனம் செய்கிறான். குழந்தை இப்படியா இருக்கும், பூனைகூடச் சரியாக இல்லையே என்று குத்தல் பேசுகிறான்; அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. இளம் ஓவியனோ, குற்றம் இருப்பதை எடுத்துக் காட்டியவருக்கு நன்றி கூறுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/253&oldid=1592737" இலிருந்து மீள்விக்கப்பட்டது