261
எண்ணிப்பார்த்தேன். கணக்கெடுத்துப் பார்க்கும்போது, பெரியாருடன் இணைந்திருந்து நான் பணியாற்றிய காலத்தைவிட, அவரைவிட்டுப் பிரிந்து வந்து பணியாற்றிவரும் காலம் அளவில் அதிகம் என்பது தோன்றிற்று. நான் அவருடன் மிக நெருக்கமாக இருந்து பணியாற்றிய காலம் 1939லிருந்து 1949 வரை—பத்தாண்டு காலம்—அவரை விட்டுப் பிரிந்து பணியாற்றத் தொடங்கி இப்போது பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் கணக்கு பார்த்த பொழுதுதான், எனக்கே வியப்பாக இருந்தது—நேற்று பிரிந்ததுபோல ஒரு நினைப்பு இருந்துவந்தது—அது எத்தகைய பொய்த் தோற்றம் என்பதை, இந்தக் கணக்கு மெய்ப்பித்தது.
இன்று எனக்கு ஒரு புதிய நட்பு கிடைத்தது—எதிர்பாராத முறையில். நூற்றுக்கணக்கான சிட்டுக் குருவிகள் இங்கு உள்ளன என்பதுபற்றி முன்பு குறிப்பிட்டேன். அந்தக் குருவிகளில் ஒன்றை, பக்குவமாகப் பறந்து தப்பித்துக்கொள்ள முடியாததை, ஒரு காக்கை கொத்திவிட்டது—இங்குள்ளவர்கள் காக்கையை விரட்டி குருவியைக் காப்பாற்றினார்கள்—என்னிடம் வந்து சேர்ந்தது. எனக்குத்தான், பறவைகள் வளர்ப்பதிலே மிகுந்த விருப்பமாயிற்றே, குருவி கிடைத்ததாலே மிகுந்த மகிழ்ச்சி. அதை எப்படி வளர்ப்பது என்பதுபற்றி நெடுநேரம் பேசி, நாளையத்தினம் ஒரு கூண்டு செய்வது என்று முடிவு செய்து, இன்றிரவு மட்டும் ஒரு பெரிய கூடையில் குருவியைப் போட்டு வைக்கலாம் என்று திட்டமிட்டோம். பகலெல்லாம் குருவியைப் பார்ப்பதிலேயும், அதற்குத் தீனி தருவதிலேயும் தனியான மகிழ்ச்சி பெற்றேன். மாலை, அறை பூட்டப்படுகிறபோது பெரிய ஏமாற்றம் என்னைத் தாக்கிற்று, குருவி எப்படியோ எங்கேயோ பறந்து போய்விட்டது. தேடிப்பார்த்துப் பயன் காணவில்லை. அந்தக் கவலையுடன் இன்றிரவைக் கழிக்க வேண்டியதாகிவிட்டது.
இன்று பிற்பகல், மதியை பெரிய மருத்துவ மனைக்கு நாளையத்தினம் அனுப்பப்போவதாக, டாக்டர் கூறிவிட்டுச் சென்றார். என் கைவலிக்கும் ஊசி போட்டார்.