பக்கம்:கைதி எண் 6342.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

287

பார்த்தசாரதி, இத்தனை நாட்களாகப் பார்த்துவந்த சமையல் நிர்வாகத்தை எப்படிச் செம்மையாகச் செய்வது என்ற நுணுக்கங்களை, புதிய நிர்வாகி காஞ்சிபுரம் தோழர் சம்பந்தத்திடம் விளக்கிக்கொண்டிருந்தார். சம்பந்தத்துக்கு இது புதிதுமல்ல, பிரமாதமுமல்ல. இங்கு 16 பேர்தானே, செங்கற்பட்டுச் சிறையில் அவருடைய நிர்வாகத்தில் 55 பேர் இருந்துவந்தார்கள் என்று, காஞ்சிபுரம் தோழர்கள் பூரிப்புடனும் பெருமையுடனும் பேசினார்கள்.

23—5—64

இன்று, பார்த்தசாரதி, சுந்தரம், பொன்னுவேல், வெங்கா ஆகிய நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர். காலை 5-30க்கே நான் எழுந்துவிட்டேன், நண்பர்களை வழி அனுப்பி வைக்க. நால்வரும், இங்குள்ள நண்பர்களிடம் விடை பெற்றுக்கொண்டு 6-30 சுமாருக்குச் சென்றனர். சிறை உடைகளைக் களைந்துவிட்டு, அவர்கள் தங்கள் சொந்த உடை அணிந்துகொண்டு, எங்களிடம் விடைபெற எதிரே நின்றபோது, ஒரு புதிய பொலிவு அவர்கள் முகத்திலே மலர்ந்தது. வெளியே செல்கிறோம், அறப்போரில் ஈடுபடச் சிறை சென்றவர்கள் இதோ விடுதலை பெற்று வந்திருக்கிறார்கள் என்று ஆயிரமாயிரம் தோழர்கள் சுட்டிக்காட்டி மகிழப் போகிறார்கள். அறப்போரின் அருமை பெருமையினை அறிந்தவர்கள் பெருமிதம் கொள்ளப் போகிறார்கள். பெற்றோரும் இல்லத்தின் மற்றவர்களும், சிறை சென்றுள்ளனரே நமது செல்வங்கள், எப்படி அவர்களைப் பிரிந்திருப்பது, உடல் நலம் கெடாமல் இருக்கவேண்டுமே, என்றெல்லாம் கொண்டிருந்த கவலை நீங்கப்பெற்று, வந்துவிட்டனர் எமது செல்வங்கள், பொலிவளிக்கும் புன்னகை தவழும் முகத்துடன் வந்துவிட்டனர் என்று கூறி, மகிழச்சிபெறப் போகிறார்கள் என்ற எண்ணம், விடுதலைபெற்ற நால்வருக்கும், புதிய தெம்பையும், நடையிலே ஒரு மிடுக்கையும் தானாகக் கொண்டுவந்து சேர்த்துவிட்டது. அவர்களை அந்த நேரத்தில் காண்பவர்களின் கண்களில் இவர்கள் சற்று முன்புவரை கைதிகளாக இருந்தவர்கள் என்று எண்ணிடக்கூடத் தோன்றாது; அத்தகைய ஒரு புதுப் பொலிவு பெற்றனர். அவர்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/287&oldid=1593511" இலிருந்து மீள்விக்கப்பட்டது