பக்கம்:கைதி எண் 6342.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

291

வெற்றிபெறாமற் போனபோது நான் சங்கடப்பட்டேன்; அப்போதுகூட அவர், வெற்றி கிட்டாததுபற்றிக் கவலை இல்லை, நீண்ட பல ஆண்டுகளாக நான் எந்தக் கம்யூனிஸ்டு கட்சியுடன் இணைந்து பணியாற்றி வந்திருக்கிறேனோ அந்தக் கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரசுடன் கூடிக்கொண்டு எனக்குத் துரோகம் செய்த அதேநேரத்தில் கழகத் தோழர்கள் கட்டுப்பாடாக இருந்து எனக்கு ஆதரவு அளித்த பெருமையும் மகிழ்ச்சியுமே எனக்குப் போதும் என்று கூறினவர்.

மேயர் பொறுப்பிலே ஈடுபட்டதிலே ஏற்பட்ட அனுபவங்கள்பற்றிச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். துணைமேயருடன், அப்போதுகூட நகரில் பல பகுதிகளைப் பார்வையிட்டுவிட்டு வருவதாகச் சொன்னார்.

எளிய வாழ்க்கையினரான அந்த நண்பருடைய தொண்டு, நகருக்குக் கிடைத்திருப்பது நல்லதோர் வாய்ப்பாகும். அவர் தொடர்புகொண்டுள்ள கம்யூனிஸ்டு கட்சியின் இன்றைய பிரச்சினைபற்றிச் சில கூற ஆரம்பித்தார்; அந்தப் பேச்சை மேற்கொண்டு விரிவாக்காதபடி நான் வேறு விஷயங்களைப் பேசலானேன்.

மாலையில் ராணி, பரிமளம், சரோஜா மூவரும் வந்திருந்தனர். மூவருக்குமேல் அனுமதி கிடையாது என்பதால், கௌதமன் வெளியிலேயே நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறினார்கள். அனைவருடைய நலன்பற்றியும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

இன்று இரவு, காஞ்சிபுரம் அறப்போரில் ஈடுபட்ட கோவிந்தசாமி குழுவினர் வழக்கில், அளிக்கப்பட்ட தீர்ப்பு விவரம் படித்துக்கொண்டிருந்தேன்.

மாலை அணிவித்தார்கள், கொடிகளைக் கொடுத்தார்கள். சென்றுவருவீர்! வென்றுவருவீர்! என்று முழக்க மிட்டு உற்சாகமூட்டினார்கள். ஆகவே தோழர்கள் சி. வி. எம். அண்ணாமலை, மார்க், சபாபதி, நெல்லிக் குப்பம் தொகுதி வட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி காட்டுமன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/291&oldid=1593515" இலிருந்து மீள்விக்கப்பட்டது