பக்கம்:கைதி எண் 6342.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

பூட்டி வைத்தார்கள்—என் மகன் இதனால் நசுங்கியா போய்விட்டான்—முதலாளித்தனம்தான் பொசுங்கிப் போய்விட்டது—இதோ, விலங்கு கொலு இருக்கிறது தளைகள் பூட்டப்பட்டிருந்தவர்கள் தரணி ஆள்கிறார்கள்—இதோ கேளுங்கள் விலங்கின் பாடலை என்று கூறி, கையிலே எடுத்து வைத்துக்கொண்டு குலுக்குவான்—அந்த ஓசை இசையாக இருந்தது கேட்பவர்களுக்கு.

எதிர்ப்புரட்சியை அடக்கும் போரில் ஈடுபட்டு மகன் மடிந்துவிட்டான் என்று தகப்பன் கேள்விப்படுகிறான். வேதனை அடைகிறான். தொழில்கள் பொது உடைமையான உடன், வேலை நேரம் குறையும் கூலி வசதி பெருகும் என்று எதிர்பார்த்த தொழிலாளருக்கு, மேலும் உழைக்கவேண்டிய நிலையும், கடினமான சூழ்நிலையும், கூலி உயராத் தன்மையும் ஏற்பட்டது; ஏற்படவே கோபம் கொந்தளிப்பு! என்னய்யா மணலைக் கயிறு ஆகத் திரிப்போம் என்று வாய்வீச்சாக நடக்கிறார்கள்; நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறதே; பொது உடைமை வந்து கண்ட பலன் இதுதானா? முன்பு வேலை செய்ததைவிட அதிகமாக வேலைசெய்ய வேண்டுமாமே! ஏன்?கூடாது! ஆகாது!—என்றெல்லாம் தொழிலாளிகள் முழக்கம் எழுப்புகிறார்கள். இரும்புப் பட்டறையில் குழப்பமான நிலைமை. பொது உடைமை ஆட்சியினர் இதை எப்படிச் சமாளிப்பது, தொழிலாளிகளுக்கு என்ன விளக்கம் அளிப்பது, சமாதானம் கூறுவது என்று குழம்பிக் கொண்டிருந்தனர். இரும்புப் பட்டறையில் மூண்டுவிட்ட கலவரம் பற்றிக் கேள்ளிப்பட்டதும், அந்த முதியவன் வீட்டுக்கூடத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்த விலங்கை எடுத்துக்கொண்டான். நேராகத் தொழிற்சாலை சென்றான். கூவிக்கொண்டும், குழம்பிக் கொண்டும் கிடந்த தொழிலாளர்களை நோக்கினான்—ஒரு மேடை மீது ஏறினான், விலங்கை எடுத்துக் குலுக்கினான்—ஓசை கிளம்பிற்று. கூச்சல் அடங்கிற்று, மேலும் குலுக்கினான்; அனைவரும் அந்த ஓசை இசையைக் கேட்டிடலாயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/308&oldid=1593550" இலிருந்து மீள்விக்கப்பட்டது