பக்கம்:கைதி எண் 6342.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

313

பாபுவும், என்ன காரணம் என்று கூற மறுக்கிறார்கள் என்று சொன்னார். அனைவருக்கும் திகிலாகி விட்டது; வீட்டில் ஏதோ விபத்து என்று உணர்ந்தோம். விவரமோ தெரியவில்லை. வேதனையை அடக்கிக்கொண்டு, சம்பந்தம் விடை பெற்றுச் சென்றார். சிறிது நேரத்திற்குப் பிறகு மணியைக் காண காஞ்சிபுரம் தோழர்கள் வந்திருந்தனர். அவர்கள் மூலமாகச் சேதி தெரிந்தது. சம்பந்தத்தின் மகன் ஏழு வயதுச் சிறுவன் அம்மை நோய் கண்டு இறந்துவிட்டிருக்கிறான்—முந்தின தினம்; மாலை அடக்கம் செய்து விட்டனராம். பிறகு, சம்பந்தம் பரோலில் செல்ல அனுமதி கிடைத்திருக்கிறது. உடலைக்கூடக் காணமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. எப்படி வேதனைப்படுகிறாரோ, என்னென்ன கூறிக் கதறுகிறாரோ, மகனைப் பறிகொடுத்த தாய் எத்தனை பதறுகிறார்களோ என்றெல்லாம் எண்ணி ஏங்கினபடி இருந்தோம். இழப்புகள், இன்னல்கள், இடாப்பாடுகள் பல பொறுத்துக்கொண்டு, இன்தமிழ் வாழ, வளர, தமது தொண்டினை நல்கும் ஆர்வம், பலரைச் சிறையிலே கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

இன்று பிற்பகல்தான், சம்பந்தம் சொன்னார்: "அண்ணா, உங்களோடு சேர்ந்து சிறையினிலே இருப்பதாலே தொல்லைகள் மிகுதியாக இல்லை" என்று. வேடிக்கையாக நான் சொன்னேன், "என்னோடு சேர்ந்ததனால் தானே அப்பா, சிறைவர நேரிட்டது உங்களுக்குக்கெல்லாம். உங்கள் வீட்டிலும் வேறு பல இல்லங்களிலும், இவனுடன் கூடிக்கொண்டு, என் மகன் சிறை சென்றுவிட்டான் என்று என்னை ஏசிக்கொண்டிருக்கிறார்களோ என்னமோ" என்று சொன்னேன். சம்பந்தம் போன்ற உழைத்துப் பிழைத்து வரும் தோழர்கள் உயர்பதவி கிடைக்குமென்றோ, ஊர் மெச்சுமென்றோ, வருவாய் பெறத்தக்க வழி கிடைக்கும் என்றோ எண்ணி அதற்காகச் சிறை வந்தவர்களல்ல—நமது கழகத்தொடர்பு கொண்டுள்ளவர்கள். அதன் காரணமாக இத்தகைய வாய்ப்புகளைப் பெறவும் இயலாது. இது நாடறிந்த உண்மை; இருப்பதை இழந்தவர்கள் பலரும் உண்டு. இது நன்கு தெரிந்திருந்தும், அச்சகத் தொழிலாளி சம்பந்தம், அறப்போரில் ஈடுபடத் தாமாக

கை.—20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/313&oldid=1598797" இலிருந்து மீள்விக்கப்பட்டது