பக்கம்:கைதி எண் 6342.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99


7. நாட்டு நிலை-பல நினைவுகள்
(கடிதம் 7. காஞ்சி— 1-11-64)


தம்பி,

2—3—64

'நலிவுற்றுக்கிடக்கும் காங்கிரஸ் கட்சிக்குப் புதுவலிவு ஊட்டும் மருத்துவர்' என்று கொண்டாடப்படும் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் காமராஜர், எல்லா அரசியல் பிரச்சினைகளையும், சிக்கல்களையும், ஒதுக்கி வைத்துவிட்டு, சென்னை மாநகராட்சி மன்றத்திலிருந்து தி.மு.கழகத்தை ஓட்டிக் காட்டுகிறேன், என் புகழை நிலைநாட்டுகிறேன், என்று சூளுரைத்துவிட்டவர்போல, பம்பரம்போலச் சுழன்று, ஒருவார காலம், தேர்தல் காரியத்தைத் தாமே கவனித்தார்; மேடைகளிலே பேசுவது மட்டுமின்றி, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைக் கண்டு பேசினார், அவருடைய மிகப்பலமான முயற்சியை எதிர்த்து நின்று. தி.மு.க. மகத்தான வெற்றியைப் பெற்றுக் காட்டிற்று; முசுலீம் லீகும் சுதத்திரக் கட்சியும் துணை நின்று, மக்களாட்சி முறைக்குப் புதிய தெம்பு ஏற்படச் செய்துள்ளனர்; இந்த மகத்தான நிகழ்ச்சியையும், இதிலிருந்து பெறத்தக்க அரசியல் கருத்துக்களையும் எடுத்துக்கூற, திராவிட முன்னேற்றக்கழக அவைத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான நாவலர் பேசுகிறார்; அகில இந்திய முசுலீம் லீக் தலைவர் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் கருத்துரை வழங்குகிறார்; சுதந்திரக் கட்சிச் செயலாளர் மாரிசாமி சொற்பொழிவாற்றுகிறார். கழகச் செயலாளர் நடராசன், சிற்றரசு, சத்தியவாணி ஆகியோருடன், கழகப் பொருளாளர் கருணாநிதியும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நல்லுரையாற்றுகிறார்கள். சென்னைக் கடற்கரையில், மிகப் பெரிய கூட்டத்தில். இதுபற்றிய செய்தியை, இந்நாட்டு இதழ்கள் எந்த முறையில் வெளியிட்டன என்பதை இன்று பார்த்த போது, உள்ளபடி மனம் நொந்துபோயிற்று. அரசியல் பண்பு இந்த அளவுக்கா பட்டுப் போய்விட வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/99&oldid=1573233" இலிருந்து மீள்விக்கப்பட்டது