பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

கோடுகளும் கோலங்களும்


“மாமியாள திருப்தி பண்ண, அவகிட்டக் கேட்டு வாங்கினீங்களா? உங்களுக்கு வெக்கமால்ல?”

“இன்னிக்கிச் செலவுக்கு வாங்கல. செவலிங்கத்த ஒரு சாமான் வாங்கி வர டவுனுக்கு அனுப்பிச்சே, நூறு ரூபா குறைஞ்சிச்சி. ஒரு அவுசரம்தானே. இருக்கு ஆத்தான்னு குடுத்திச்சி. நா இன்னிக்கி எனக்கு வரவேண்டிய பணம் இருக்கு, குடுத்துடலாம்னு இருந்தே. அதுக்கு இப்படிச் செலவு வந்திட்டது. அது சீட்டுக் கட்டுன பணத்திலேந்து குடுத்திருக்கு...”

“சரி, நா குடுத்துக்கறேன். நீங்க கவலைப்பட வானாம்...”

“இல்ல, நா வாங்கினத நானே குடுக்கிறதுதா முற...”

“இப்ப இந்த நேரத்துல நா பணத்துக்கு எங்க போவ? காலயில, எத்தையானும் ஆண்டாளம்மா வூட்டில வச்சிட்டு வாங்கித் தாறன்...”

“நீ தரவே வேணாம். நான் புரட்டிக் குடுக்கிற...”

மழை விட்டிருக்கிறது.

சரோ வருவது தெரிகிறது.

“ஏய், எங்க போயிட்டு வார? இருட்டினப்புறம், வயிசு வந்த பொண்ணு...”

“எங்கும் போகல. அந்த வூட்டுல செந்தில் கூடப் பேசிட்டிருந்தே...”

“செந்தில் கூட இன்னா பேச்சு? காதோரம் கிருதாவும் மீசையும் சிகரெட்டும் விடலயாத்திரியிறா. பத்துப் படிச்சி முடிக்கல. அவங்கூட இன்னாடி பேச்சி? எதோ பொம்புளப் புள்ள படிக்கப் போற. பத்து படிக்கிற. படிச்சிட்டுப் போகட்டும்னு வுட்டா, சொன்ன பேச்சேகேக்குறதில்ல! இது சம்சாரிக் குடும்பம். அதுக்குத் தகுந்த மாதிரி இருந்துக்க!”

“அட போம்மா! நீ ரொம்ப போராயிட்டே” என்றவள் புத்தகத்தைக் கொண்டு உள்ளே வைக்கிறாள். அடுத்த நிமிஷம், அவள் ரேடியோவில் இருந்து பாட்டு வருகிறது.