பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
VII
புலவர் கண்ட வருங்காலத் தமிழகம்

மக்கட்குழுவின் விழுமிய நாகரிக வாழ்க்கைக்குத் துணை செய்பவர் நல்லிசைப் புலவரே. இற்றைக்கு ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழ்ப் புலவர் எல்லாரும் தமிழினத்தாரது நாகரிக வாழ்க்கைக்கு இன்றியமையாத அறிவும், முயற்சியும் உடையராய் வாழ்ந்தமையால், தமிழ் நாடு கலைத்துறையிலும், நாகரிகப் பண்பாடுகளிலும் தலை சிறந்து விளங்கியது. சென்ற காலத்தின் பழுதிலாத் திறத்தினையும், எதிர்காலத்தின் சிறப்பினையும், தம் நிகழ்கால வாழ்க்கையுடன் இயைத்து நோக்கித் தம்மைச் சார்ந்த மக்களைக் கல்வித் துறைகளிலும், தொழிற் றுறைகளிலும் உயர்த்த வல்ல பேரறிவு வாய்ந்தவரே புலவர் எனப் போற்றப் பெறுபவராவர். அறிவும், முயற்சியும் உடையார் தம்மில் ஒருங்கு கூடித் தம் அறிவின் திறத்தையும், செயற்றிறத்தையும் தம்முள் ஒருவர்க்கொருவர் தெரிவித்து, எல்லா மக்களையும் அறிவிலும், முயற்சியிலும் முன்னேற்றுதற்குரிய அறிவுரைகளை வழங்கி, நல்வழிப் படுத்துதலே புலவர்களின் தொழிலாகும்.

புலமைக்குக் கருவியாய் விளங்குவது மொழி. நிலத்தின் வளத்தினை அதன் கண் தோன்றிய நென்முளை காட்டுவது போல, மக்களது அறிவினைப் புலப்படுத்துவது, அவர்களாற் பேசப்படும் தாய் மொழியாகும். எனவே, புலமைக்கு அடையாளமாய் விளங்கும் அம்மொழியினைக் கெடாது போற்றுதல் புலவர்களின் கடமையாயிற்று.

சங்க காலத் தமிழ்ப் புலவர் எல்லாரும் தாம் பேசும் சொற்கள் திரிபடையாமலும், வேற்று மொழிக் கலப்-