பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

178

பாவமென்றே நினைக்காமல், புண்ணியமாகவே எண்ணிச் செய்யும் சில காரியத்திற்கும் தண்டனை உண்டு என்று பெரியவர்கள் உதாரணத்துடன் கூறுகிறார்கள், அதாவது ஒரு ராஜா மகா தர்மிஷ்டன். பாவம் என்பதையே அவன் அறியாதவன். பரம பக்த சிகாமணி. தெய்வ வழிபாடுகளைத் தனது ஜீவநாடியாகச் செய்து வருபவன். அத்தகைய அரசன் ஸம்ஸ்க்ருத பண்டிதன். மற்ற எந்த பாஷையையும் வெறுத்து, மட்டமாக நினைப்பவன். அவன் சமூகத்திற்கு ஒரு ப்ராம்மணன் கவி பாடுவதற்காக வந்து, தமிழ் பாஷையில் பகவானின் மீது கவிகள் பாடினான். அரசன் அதை வெறுத்து, உத்க்ருஷ்டமான ஸம்ஸ்க்ருத பாஷையில் பாடாமல், தமிழில் பாடியதற்காக ப்ராம்மணனைச் சிறையிலிட்டு விட்டானாம். ஸம்ஸ்க்ருத பாஷையைத் தவிர, வேறு எந்த பாஷையில் பாடினாலும் குற்றம் என்று அவன் எண்ணம். காலாந்தரத்தில் அரசன் உயிர் நீத்த போது, அவனை எமபடர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்ல வந்தார்களாம். நான் என் மனமறிய பாபமே செய்ததில்லையே, எனக்கெதற்காக நரக தண்டனை என்று கேட்டு வருந்தினானாம் அரசன்.

நீ பாவம் என்று அறியாமலேயே செய்த பாவத்திற்காக, இந்த தண்டனையை நீ அனுபவித்தாக வேண்டும். பகவானின் நாமத்தைப் பாடுவதற்குத் தமிழ் பாஷையானால் என்ன! வேறு எந்த பாஷையானால்தான் என்ன? விஷயந்தானே ப்ரதானம்! பகவானின் நாமத்தை நீ கவனியாமல், பாஷையில் விரோதங் கொண்டு, ஒரு ப்ராமணனை தண்டித்தது மகா பாதகத்தில் சேர்ந்ததல்லவா… என்றானாம் எமதர்ம ராஜன். பாவம் என்று நினையாத செய்கைக்கே இப்படியாயின், பாவத்தையே தெரிந்து, அறிந்து மனம், வாக்கு, காயம்,