பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 - சிலப்பதிகாரம்

எனவே கண்ணகி கற்புடைத் தெய்வம்' என்று அடிகள் கூறியது செயலுக்கு வந்து சேர்கிறது. சேர நாட்டில் அவளுக்குக் கோயில் அமைக்கப்படுகிறது. உலகிற்கு ஓங்கிய திருமாமணி யாகிறாள்.

அடுத்தது அவள் கற்பின் திறம்; இதைச் சித்திரிப்பதே காவியத்தின் பொருள் ஆகிறது.

'வடமீனின் திறம் இவள் திறம்' என்று மாதரார் தொழுது ஏத்துகின்றனர். மணமேடையில் கண்ணகியைத் தீ வலம் செய்விக்கிறான் கோவலன். அங்கே 'சாலி ஒரு மீன் தகையாள் என்று அவள் தொடர்ந்து குறிப்பிடப்படுகிறாள்.

மீண்டும் அதே செய்தியை வற்புறுத்தக் காண்கிறோம்.

'அங்கண் உலகில் அருந்ததி அன்னாளை

மங்கல நல்லமளி ஏற்றினார்'

என்று கூறுவார் ஆசிரியர்.

இவள் கற்பின் திறம் வெளிப்படும் சூழ்நிலைகள் தொடர்ந்து ஏற்படுகின்றன.

தேவந்தி இவளைத் தெய்வத்தை வழிபடும்படி கூறுகிறாள். 'சோம குண்டம் சூரிய குண்டம் இத்துறைகளில் முழுகி எழுந்து காமனை வழிபட்டால் கணவனை அடைந்து இன்புறுவர்' என்று கூறுகிறாள்.

'பீடு அன்று' என்று கூறுகிறாள் கண்ணகி. கணவனை வழிபடுகின்றவள் காமனை வழிபட அவள் நினைக்கவில்லை. 'தெய்வம் தொழாள்' என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறாள். அது மட்டுமன்று; இன்பம் அவள் குறிக்கோள் அன்று. இன்புறுவர் என்று கூறுகிறாள் தேவந்தி. இல்வாழ்வுக்கு இன்பம் அடிப்படை யன்று; அன்புதான் அடிப்படை என்பதை அறிவித்துவிடுகிறாள். 'பீடு அன்று' என்பதில் இந்தக் கருத்தும் அடங்கியிருக்கக் காண்கின்றோம்.

அவள் கற்பின் திறத்துக்கு மற்றும் ஒர் எடுத்துக்காட்டுச் சிறப்பாக அமைந்துள்ளது.