பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவலன் 217 சிற்றினம் சேர்ந்து சீரழிந்தவன் என்று தெரிகிறது. அதற்குக் காரணம் அவன் இன்ப வேட்கை என்று கூறலாம்.

அன்பும் அறனும் கண்ணகிபால் கண்ட அவன் இன் பத்தை மாதவியிடம் காண்கிறான். அவன் இன்ப வேட்கை கண்ணகியின் பாராட்டுதலில் தெரியவருகிறது. காதல் இன் பத்தைக் கவின் உற எடுத்து உரைக்கின்றான். கலவியை அவளிடம் காண்கின்றான். புலவியை அவளிடம் காண முடிய வில்லை.'ஊடுதல் காமத்திற்கு இன்பம்' என்பர் வள்ளுவர். அந்த வாய்ப்பினைக் கண்ணகியிடம் அவன் பெறவில்லை என்று தெரிகிறது. கலவியும் புலவியும் காதலனுக்கு அளித்தது மாதவி.

இவன் மாதவியிடம் கண்டது கவர்ச்சி என்று கூறலாம். ‘இவன் கலைகள் அறிந்தவன் அவற்றில் சுவைத்து மகிழ் பவன். மதுரை சென்றபோது பாணருடன் பழகி அவர்கள் இசை கேட்டு மகிழ்கிறான். கானல் வரிப்பாடல்களை இவனும் பாடுகிறான். மாதவியின் செயல்கள் அனைத்தும் நடிப்பு என்று கூறும்போது நாட்டியக் குறியீடு வைத்து அவற்றை எள்ளி நகையாடுகிறான். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு குறியீடு; கண்கூடுவரி, காண்வரித் தோற்றம், உள்வரி ஆடல், புன்புறவரி,கிளர்வரிக்கோலம், தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக் கோள்வரி எனப பெயர்கள் தருகின்றான். எனவே மாதவிபால் இவன் நாட்டம் கொண்டதற்கு இவன் கலையுணர்வும் காரணமாகிறது.

'ஆடல் பாடல் அழகு இம்மூன்று அவனைக் கவர்கின்றன. செல்வச் செருக்கு உடன் சேர்கின்றது. விலை கொடுத்து வாங்குவதில் அவன் முன்வருகின்றான். இவ்வளவு தொகை கொடுப்பதற்குக் காரணம் அவன் செல்வச் செருக்கு என்று கூறலாம். எனவே அவன் கலை ஆர்வம், மகிழ்வு நாடும் மனம், செல்வ மிகுதி இவையே அவன் மாதவிபால் உறவு கொள்வதற்குக் காரணம் ஆகின்றன.

மாதவி அவனை முழுவதும் காதலிக்கிறாள். 'காதலன்' என்றே அவன் கூறப்படுகிறான். அவளைக் 'காதலி' என்று எங்குமே அவன் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. இளங்கோ வடிகளும் அவனுடைய காதலி என்று மாதவியைக் கூறவே இல்லை.