பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 மனையறம்படுத்த காதை

பொய்கையை அடைந்துவிட்டது. அமிழ்தும் யாழும் குழைத்த அவள் இனியதொரு கிளவி கேட்டுக் கிளி வருந்துகிறது. முழுமையாகக் கற்றுக் கொள்ள அவளை விட்டு நீங்காமல் உடன் உறைகிறது” என்று பாராட்டினான்.

'தோழியர் அவர்களுக்குக் கோலம் செய்தவர்கள் மாபெரும் தவறு செய்து விட்டார்கள்' என்று பேசுகிறான். 'மங்கலத்தாலி அது ஒன்று போதும். பிங்கல நிகண்டுபோல் அவர்கள் பிற அணிகள் அணிவித்தது ஏன்?' என்று கேட்கிறான்; "முலைத் தடத்திடை அவர்கள் அலைத்திடல் என எழுதிய தொய்யில் போதுமே” என்றான். 'முத்து ஆரம் ஏன் அணிவித்தனர்' என்று கேட்கிறான். 'நகை அது மிகை” என்று கூறி அவன், 'அழகுக்கு அழகு செய்வது வீண்" என்கிறான்.

பின் அவளைத் தொடர்ந்து மேனி அழகைக் காண்கிறான்; 'பொன்னே' என்கிறான். தொட்டுப் பார்க்கிறான்; 'வலம்புரி முத்து' என்கிறான். நுகர்வில் கண்ட இன்பம் அதனால் அவளை 'நறு விரை' என்கிறான். இதழ்ச் சுவையால் 'கரும்பு' என்கிறான். மொழிச் சுவையால் "தேன்' என்கிறான்.

'மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே! கரும்பே! தேனே!” என்று அடுக்கிக் கொண்டே போகிறான். உலவாக் கட்டுரை பலவற்றைக் கூறுகிறான்.

5.

கிடைத்தல் அருமைபற்றி 'அருந்திறல் பாவாய்' என்கிறான். அவன் வாழ்வுக்கு அவள் இன்றியமையாதவள் என்பதால் 'ஆருயிர் மருந்து' என்கிறான். 'அலையிடைப் பிறவா அமுது', 'மலையிடைப் பிறவா மணி', 'யாழிடைப் பிறவா இசை' என்று அவள் அருமைகளைக் கூறுகிறான். அவள் வணிக மகள் என்பதில் பெருமை கொள்கிறான். 'குலமகள்' என்பதை அறிந்து அவளுக்கு அதனால் தனி மதிப்புத் தருகிறான். 'பெருங்குடி வாணிகன் பெருமட மகளே' என்று அழைக்கிறான். செல்வக் குடியில் பிறந்த சிறப்பினைச் செப்புவதாக அக் கூற்று அமைகிறது. அவள் கூந்தலைத் தடவிக் கொடுக்கிறான். 'தாழிருங் கூந்தல் தையால்' என்று விளிக்கிறான். தாழிருங் கூந்தல் விரிந்த கூந்தலாக மாறும் என்பதை அவன் எப்படி முன்கூட்டி உணர முடியும்!