பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 அரங்கேற்று காதை

சாபம் இங்கு இப் புகார் நகரில் இதே நாட்டிய அரங்கில் தீர்ந்தது; அகத்தியன் அருளால் சாபம் நீங்கியது என்பர். அத்தகைய சிறப்பு மிக்க ஊர்வசி புகார் நகரில் பிறந்தாள். அவ்வழி வந்தவள் மாதவி என்று சிறப்பித்துப் பேசப்பட்டது.

கலைச் சிறப்பு

ஐந்தில் தொடங்கி ஏழாண்டுகள் அவள் நாட்டியக் கலை பயின்று தேர்ச்சி பெற்றாள். அவள் கலையை நாடறியச் செய்ய ஒரு வாய்ப்பு அவள் நாட்டிய அரங்கு ஏறி, அரசனின் மதிப்பையும் பாராட்டையும் பெற விரும்பினாள். தன் கலைத் திறனை நன்கு மன்னனுக்குக் காட்ட வேண்டி அரங்கு ஏறினாள்.

அவள் ஆடல் கலைக்குத் துணை நின்றவர்கள் நாட்டிய ஆசான்; பாட்டியல் புலவன் இசைப்புலவன்: தண்ணுமை யாளன் (முழவு இயக்குபவன்), யாழ் வாசிப்பவன், குழலோன் இத்தகையவர் ஆவார்.

நாட்டிய மேடை

நாட்டிய அரங்கு சிற்ப சாத்திர முறைப்படி அமைக்கப் பட்ட ஒன்று. அதன் உயரம், நீளம், அகலம் குறிப்பிட்ட அளவுகளைக் கொண்டு விளங்கியது. தக்கோன் ஒருவன் கைவிரல் அளவு இருபத்து நான்கு கொண்டது ஒரு கோல் எனப்பட்டது.

தரையில் இருந்து மேடை ஒரு கோல் அளவினதாக இருந்தது; அதன் அகலம் ஏழு கோல் அளவு என்றும், நீளம் எட்டுக்கோல் அளவு என்றும், உயரம் நான்கு கோல் அளவு என்றும் கூறப்பட்டன. திரைச் சீலைகள் ஒரு முக எழினி, எதிர்முக எழினி, கரந்துவரல் எழினி என்று மூன்று வகை அமைக்கப்பட்டன. வழிகள் இரண்டு வைக்கப்பட்டு இருந்தன. மேடை மீது வருணப் பூதர் சித்திரங்கள் மாட்டி இருந்தனர். இந்த இசைக் கலைஞர்கள் அத் தெய்வங்களை வழிபட்டே நிகழ்ச்சிகளைத் தொடங்கினர். அதன் விளக்குகள் தூண்களின் நிழல்கள் தடுக்காதவாறு தக்க வகையில் அமைக்கப்பட்டன. தலைக்கோல் அதனை மேடையில் நிலைக்கோலாக வைத்துச் சிறப்புச் செய்தனர்.