பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 அரங்கேற்று காதை

தொடுதலில் கண்ட இன்பம் அவனை ஈர்த்துப் பிடித்தது. வடு நீங்கிய சிறப்பினை உடைய தன் மனைவியையும், வீட்டையும் விடுதல் செய்தான்; மறந்தான்.

மாதவி இவ்வாறு நாட்டியக் கலையை நிலைபெறச் செய்தாள். அவள் கலை நிலைபெற்றது. அரங்கு ஏறி அவள் புகழ் மிக்கவள் ஆயினாள்.

4. கண்ணகியின் பிரிவுத் துயர் (அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை)

அந்தி மாலை

மாதவி மகிழ்ந்தாள்; கண்ணகி துயர் உழந்தாள். மாலைக் காலம் கூடியவர்க்கு இன்பம் அளித்தது; பிரிந்து வாடியவர்க்குத் துன்பம் தந்தது.

இந்த மாலைப்பொழுது நில மடந்தைக்கு வான்துயர் தந்தது. கதிரவன் மறைகிறான். கணவனைக் காணாமல் வருந்துவது போல் இம் மாநில மடந்தை வருந்தியது. அதன் திசை முகங்கள் பசந்து காணப்பட்டன. திங்களின் வருகையை அது ஆவலோடு எதிர்நோக்கியது. கணவனை இழந்து கடுந்துயர் உழந்த நிலமடந்தை தன் ஆருயிர் மகன் ஆகிய திங்கள் எங்கே உள்ளான் என்று எதிர்நோக்கி இருந்தது.

பேரரசன் இல்லாத நேரத்தில் குறும்பர்கள் வந்து நாட்டு மக்களை அலைக்கழிப்பது போல் ஞாயிறு இல்லாத நேரத்தில் இந்த மாலைப்பொழுது வந்து மக்களை வாட்டியது. நில மடந்தையை வருத்தியது.

மகளிர் நிலை

இந்த மாலைக் காலத்தில் மகளிர் நிலை யாது? கணவனை விட்டுப் பிரியாதவர்கள் களிமகிழ்வு எய்தினர். பிரிந்தவர் துன்புற்று வருந்தினர். முல்லை முகைகளில் வண்டுகள் மொய்த்து அவற்றை மலர வைத்தன; கார் காலத்தில் இந்த