பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை - 253

முல்லை மலர்ச்சியைக் கண்டு 'பிரிந்தவர் வந்திலர்' என்று மகளிர் வருந்தினர். ஆயர்கள் முல்லைப் பண்ணைத் தம் குழலிசையில் தோற்றுவித்தனர்; அவ் இசை அவர்களை வருத்தியது.

மகிழ்ச்சி பொங்கும் இல்லத்தினர் தத்தம் வீடுகளில் விளக்கேற்றி வைத்தனர். இணைந்து இருந்தவர் மகிழ்வு தருவது மாலை எனக் கருதினர்; மயக்கத்தைத் தருவது இது என்று பிரிந்தவர் கருதினர்.

மாதவி மகிழ்ச்சி

நிலா ஒளி வீசியது; மாலைப்பொழுது மறைந்தது. மாலைப் பொழுதாகிய குறும்பர்களைத் திங்கள் ஆகிய பேரரசன் வந்து ஒட்டியது போல நிலவு வெளிப்பாடு இருந்தது. இந்த நிலவு ஒளியில் கோவலனோடு மாதவி குலவி மகிழ்ந்தாள். மஞ்சத்தில் அவன் அவள் கொஞ்சலில் திளைத்தான். ஒப்பனைமிக்கு விளங்கி அவனுக்கு ஊடலும், கூடலும் தந்து உவகையுறச் செய்தாள்.

இவளைப் போலவே ஏனைய மகளிரும், உயிர் அனைய தம் கொழுநருடன் அவர்கள் மார்பில் ஒடுங்கிக் களித்துயில் எய்தினர். அந்த இரவு அவர்களுக்கு இன்பத்தைத் தந்தது. அவர்கள் நறுமணம் கொண்டு தம்மை அழகுபடுத்திக் கொண்டனர். பூக்கள் அணிந்து பொலிவுடன் திகழ்ந்தனர்.

கண்ணகி கடுந்துயர்

கண்ணகி தனிமையில் வாடினாள்; அவளுக்கு வாழ்க்கை கசந்தது. அழகு ஊட்டும் அணிகள் அவளுக்குச் சுமையாயின. காலில் அணிந்திருந்த சிலம்பு அதைக் கழற்றி வைத்தாள். குங்குமம் அப்பிக் கொங்கைகளை அழகுபடுத்துவதை நிறுத்தி விட்டாள்; தாலி அது மங்கல அணியாதலின் அது மட்டும் தங்க இடம் தந்தாள். ஏனைய அணிகள் அவளை விட்டு நீங்கின. காதில் அணிந்திருந்ததோடும் அது கேடுற்றது.

அவள் நெற்றி அவன் கூடி இருந்தபோது வியர்த்து மகிழ்வைப் புலப்படுத்தியது. அந்த வியர்வை அவளைவிட்டுப் பிரிந்தது.