பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 இந்திர விழவு ஊர் எடுத்த காதை

பார்க்கத் தகுந்த காட்சியாக விளங்கியது திருமாவளவன் அமைத்த சித்திர மண்டபம். அவன் வடநாடு சென்று வெற்றி கொண்டு திரும்பி வருகையில் பேரரசர்கள் அவனுக்குத் திறைப் பொருளாக மூன்று பொருள்களைத் தந்தனர். ஒன்று கொற்றப் பந்தர்'; மற்றொன்று பட்டிமண்டபம்'; மற்றொன்று தோரண வாயில்' வச்சிர நாட்டு அரசன் தந்தது கொற்றப்பந்தர், மகத நாட்டு அரசன் தந்தது பட்டிமண்டபம்; அவந்தி வேந்தன் அளித்தது தோரணவாயில். இவை மானுடரால் செய்யப் பட்டவை அல்ல; தேவதச்சன் மயன் செய்து தந்தவை; இந்திரன் அவ் அரசர்களுக்கு அவ்வப் பொழுது தந்தவை அவை எனப்பட்டன. இவற்றை ஒருங்கு வைத்து ஒரே மண்டபமாகத் திருமாவளவன் சமைத்தான் என்பது வரலாறு. இது சித்திர மண்டபம் எனப்பட்டது. இந்திர விழாவுக்கு வருபவர் இதனையும் கண்டுமகிழ்ந்தனர்.

ஐம்பெரு மன்றங்கள்

மற்றும் அந்நகரில் காணத் தகுந்தவை ஐம் பெரும் மன்றங்கள் எனப்பட்டன. இவை பல்வேறு சோழர்கள் காலத்தில் இந்திரனால் அளிக்கப்பட்டவை என்று கூறப் படுகிறது.

களவு செய்வோரை அவர்கள் தலையில் களவாடிய பொதிகளை அடுக்கிவைத்துச் சுற்றிவரச் செய்வது 'வெள்ளிடை மன்றம்' எனப்பட்டது. நோய் நொடியால் வாடுவோர் குளத்து நீரில் முழுகி எழுந்தால் அவர்கள் நோய் தீர்ந்தனர். அந்தக் குளம் உடைய மன்றம் இலஞ்சிமன்றம்' எனப்பட்டது; பித்தம் பிடித்தவர், நஞ்சு உண்டவர், அரவு தீண்டப் பெற்றவர் இவர்கள் துயர் நீங்கி உயர்வு பெற்றனர். அந்தப் பகுதிக்கு 'நெடுங்கல்நின்ற மண்டபம்' என்று கூறப்பட்டது. தீய ஒழுக்கத்தவர் அவர்களைப் புடைத்து உண்டு தண்டித்தது 'பூத சதுக்கம்' எனப்பட்டது. அரசன் நீதி தவறினாலும், மன்றங்கள் தவறான தீர்ப்புகள் வழங்கினாலும் கண்ணிர் உகுத்து அழுது காட்டி அநீதியை எடுத்து உரைத்தது; அது 'பாவை மன்றம்' எனப்பட்டது. இவை ஐம்பெரு மன்றங்கள் எனப்பட்டன. இவையும் வியத்தகு காட்சிகள் ஆயின; இவ்விழாவுக்கு வந்தவர் இவற்றைக் கண்டு வியந்தனர்.