பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 கனாத்திறம் உரைத்த காதை

வாயை அடக்கினாள். 'பீடு அன்று' என்று கூறி அவளை அனுப்பி வைத்தாள்.

அதன்பின் ஏவற்பெண் ஒருத்தி யாரோ வருகிறார்கள் என்பது அறிந்து கடைத்தலை சென்று பார்த்தாள். வந்தவன் காவலன் என்று குறிப்பிட்டாள். அந்த வீட்டுத் தலைவன் என்பதை அறிவித்தாள்.

கோவலனும் நேரே வந்து அவள் பெருமை மிக்க பள்ளியறைக்குச் சென்று அவளைப் பார்த்தான்; வாடிய மேனிகண்டு வருத்தம் அடைந்தான்; அவன் அவளோடு உரையாடிய சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருந்தன. 'வஞ்சனை மிக்க ஒருத்தியின் வலையில் அகப்பட்டுக் குலம் தந்த செல்வத்தை எல்லாம் தொலைத்துவிட்டேன். குன்று போன்ற செல்வம் அது குன்றிவிட்டது; இப்பொழுது வறுமை வந்து உள்ளது: இலம்பாடு அது எனக்கு நாணத்தைத் தருகிறது” என்று அவளிடம் தன் மனநிலையைத் தெரிவித்தான்; செறிவு மிக்க சொற்களைக் கேட்டு அறிவுமிக்க கண்ணகி நலம்திகழ் முறுவல் நகைமுகம் காட்டிச் 'சிலம்பு உள கொள்க' என்றாள். இச் சொற்கள் அவனுக்கு எழுச்சி தந்தன. அவன் சிந்தனை சீர்பெற்றுப் பறந்தது. அவளோடு கலந்து உரையாடி அவள் கூறும் கருத்துக்கு அவன் காத்திருந்தான். 'இழந்த பொருளை ஈட்டுதல் வேண்டும், இந்தச் சிலம்பினை முதற் பொருளாகக் கொண்டு நகைகள் செல்வம் அனைத்தையும் மீட்பேன்" என்றான். அதோடு அவன் நிறுத்திக் கொள்ளவில்லை. மாடமதுரைக்குச் சென்று வாணிபம் செய்யும் கருத்தை அறிவித்தான்.

அதனோடு அவன் அமையவில்லை. அவளையும் உடன் வருக என்று அழைத்தான். இவ்வளவு விரைவாக முடிவு செய்தது வியப்பாகத்தான் உள்ளது. அவன் என்ன செய்வான்? ஊழ்வினை அவனை ஆட்டுவித்தது. இருள் நீங்கிய விடியற்பொழுதில் அருமனை விட்டு அகன்றான்.

கண்ணகியுடன் அவன் புறப்பட்டான். மாதவி அவன் காலை வருவான் என்று கூறியது பழுது ஆகிவிட்டது. யார் இதை எதிர்பார்த்தார்கள்? நம்பிக்கை அவளைப் பொறுத்த வரை தளர்ந்தது. அவள் வாழ்க்கை சோகத்தில் ஆழ்ந்தது. துன்பம் அவளைப் பற்றியது.