பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 281

எங்களுக்குக் கிடைத்தது' என்று பதில் உரைத்தான். கவுந்தி அடிகளும் உடன் புறப்பட உடன்பட்டார்.

வழிகளைக் கூறுதல்

அறிவுமிக்கவர்; மதுரை பற்றி நன்கு அறிந்தவர்; போகும் வழிகளையும் அறிந்து வைத்தவர்; அதனால் கவுந்தியடிகள் வழியின் அருமையைத் தான் தெரிந்த அளவு அவர்களுக்கு உரைத்தார். செல்வதற்கு உரிய வழிகள் இரண்டு; சோலை வழியே செல்வது; மற்றொன்று வயல் வழியே செல்வது; இரண்டிலும் உள்ள தடைகள், இடையூறுகள் எவை என்பதை எடுத்துக் கூறினார்.

"வெய்யிலின் கொடுமை தீரச் சோலை வழியே செல்வது தக்கதுதான்; என்றாலும் அவ்வழியில் குறைகள் உள; அவற்றையும் அறிவீராக” என்றார்.

'கிழங்குகளை அகழ்ந்து எடுத்துக் குழிகள் உண்டாக் குவர். அடுத்துள்ள செண்பக மரங்கள் தம் பூக்கள் அவற்றின் மீது படிய அவற்றை மறைத்து விடும். பூக்கள் தானே என்று அடி எடுத்து வைத்தால் குழிகள் அவை; விழுந்தால் எழுவது அரிது; சரி, அவற்றையும் கணித்து அணித்து உள்ள பலாமரங்கள் செறிந்த பாதை சென்றால் அதன் கனிகள் நடப்பாரின் தலைகளை முட்டும். அவற்றை விலக்கி மஞ்சளும் இஞ்சியும் மயங்கிக் கிடக்கும் பாத்திகளில் சென்றால் அங்கே பலாவின் கொட்டைகள் கூழாங்கல் போல் தடுத்து உறுத்தும்.

சோலைவழி அதனைத் தவிர்த்து வேறுவயல் வழிதேடுவோம் என்றால் நிழல் தரும் மரங்கள் இல்லாத பாதை: எங்கும் வயல்கள்; அங்கே குவளைகள் பூக்கும் நீர்நிலைகள். அவற்றில் உள்ள வாளைமீனைக் கவ்வ நீர்நாய் செல்லும்; அவற்றினின்று தப்ப அவ்வாளைகள் நடக்கும் பாதையில் துள்ளி வந்து விழும்; அதனைக் கண்டு இந்த மெல்லியலாள் திடுக்கிடக் கூடும். தீமை நிகழாது; எனினும் அதைக் கண்டு கண்ணகி அஞ்சும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. கரும்பில் விளைந்த தேன் சாறு அடுத்து உள்ள பொய்கையைச் சாரும்; நீர் என்று அள்ளிக் குடித்தால் அது கரும்பின் சாறு ஆகலின் அது மயக்கத்தைத் தரக் கூடும்; அதனால் கண்ணகி வருந்த நேரிடும்;