பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 287

பெருமைகளை அடுக்கிக் கூறினான். கடல் அலைகள் கரைகளில் மோத அவற்றில் கால் வைத்து அதனை அடக்கினான் ஒரு பாண்டியன்; அவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் எனப்பட்டான். அவன் அதனை வற்றச் செய்வதற்குத் தன் கைவேலைக் கடலில் எறிய அது பொறுக்காது கடல்கோள் எழுந்து பஃறுளியாற்றையும் குமரிக் கோடு என்னும் மலையையும் அழித்துவிட்டது. எல்லை சுருங்கிய காரணத்தால் அவன் அதனைப் பெருக்க வடநாடு படையெடுத்துச் சென்று கங்கையையும், இமயத்தையும் தன் அடிப்படுத்தினான். இது ஒரு வரலாறு.

மற்றொரு பாண்டியன் இந்திரனால் பாராட்டப் பட்டான். அவன் தந்த பொன்னாரத்தைத் தன் கழுத்தில் பூண்டான். 'ஆரம் பூண்ட பாண்டியன்' என அவன் பாராட்டப் பெற்றான்.

மற்றொரு பாண்டியன் இந்திரனை எதிர்த்து அவன் தலைமுடியைத் தன் கைச் செண்டால் அடித்துச் சிதறச் செய்தான். அதனால் இந்திரன் வெகுண்டு எழுந்து எழில் மிக்க மேகங்களை மழை பொழியாமல் தடுத்தான்; அவற்றைச் சிறைப் பிடித்து இழுத்து வந்து நிறைமழை பொழியுமாறு பாண்டியன் கட்டளை இட்டான். 'மேகத்தைக் கால் தளையிட்டுப் பணிவித்த பாண்டியன் இவன்' என்று பாராட்டப்பட்டான்; இச்செயலைச் செய்தவன் உக்கிரப் பெருவழுதி என்பான் ஆவான். இம் மூவரையும் வாழ்க என்று வாழ்த்துக் கூறியவனாய் அம்மறை யவன் வந்தான். பாண்டியனின் புகழ் மொழிகளை அடுக்கிக் கூறிய பின் அவன் தன் பயணத்தைப் பற்றி ஒரு விரிவுரையையே நிகழ்த்தினான்.

'திருவரங்கத்தில் திருமால் துயிலும் வண்ணத்தை யும், திருவேங்கடத்தில் அத் தெய்வம் நிற்கும் அழகினை யும் காணப் புறப்பட்டேன். யான் குடமலை மாங்காட்டில் வசித்து வருபவன், தென்னவன் நாட்டின் தீது தீர் சிறப்பை நேரில் கண்டு வருகிறேன்; அதனால்தான் அவனை வாழ்த்திக் கொண்டு வருகிறேன்; இதுவே என் வருகை' என்று அவ் அந்தணன் உரைத்தான். தேசங்கள் பல கண்ட அவனிடம் கோவலன் நேசம் பாராட்டினான்.

'மாமறை முதல்வனே! மதுரைக்குச் செல்லும் நெறியாது? அதனைக் கூறுக' என்று கோவலன் கேட்க அவன் வழித்திறத்தைத் தன் நாவன்மை தோன்றக் கூறினான்.