பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 வேட்டுவ வரி

12. கொற்றவையை வழிபடுதல் (வேட்டுவ வரி)

கடுமையான வெய்யிலில் நடந்ததால் கண்ணகி மிக்க துன்பத்தை அடைந்தாள்; மூச்சு வாங்க உயிர்த்தாள் ஐயை கோட்டத்து ஒரு பக்கம் நடந்த களைப்புத் தீர மூவரும் இருந்தனர்.

அக்கோயிலின் மறுபக்கத்தில் சாலினி என்னும் தேவராட்டி ஒருத்தி தெய்வமுற்று ஊர் நடுவே இருந்த மன்றத்தில் அடிபெயர்த்து ஆடினாள்; "மக்கள் வாழும் நகரங்களில் பசுக் கூட்டங்கள் மிக்கு உள்ளன; வில்லேந்தும் வேடுவர் மன்றுகள் வெறிச்சிட்டுக் கிடக்கின்றன. இவர்கள் அறக்குடியினர் போல் அடங்கிக் கிடக்கின்றனர். கொற்றவைக்கு உற்ற பலி தராவிட்டால் அவர்கள் வெற்றிபெற இயலாது; கள் பெற்று மகிழும் வாழ்க்கை வேண்டும் என்றால் கொற்றவைக்குப் பலி இட்டு மேற் செல்லவும்' என்று அறிவித்தாள். அவர்களைச் செயல்படத் துண்டினாள்.

வீர மரபினராகிய அவ்வேடுவர் பலி இட்டுத் தம் தலையை எண்ணுவரே யல்லாமல் நோயில் பட்டு இறத்தலை அவர்கள் விரும்பியது இல்லை. அத்தகைய வீர மரபினர் தம் குடிப் பிறந்த குமரிப் பெண் ஒருத்தியைக் கோலம் செய்து கொற்றவை ஆக்கினர். கொற்றவை வேடம் பூட்டினர். அவள் சுருண்ட கூந்தலை அரவின் குட்டி போலக் காட்சி பெறுமாறு கட்டி முடித்தனர்; தோட்டத்துள் மேய்ந்த பன்றியைக் கொன்று அதன் வளைந்த கொம்பினைப் பிடுங்கிப் பிறைச்சந்திரன் எனச் சூட்டினர்; புலிப்பல்லைக் கோத்துத் தாலி என அணிவித்தனர். புலித்தோலை மேகலையாக உடுத்திக் கரிய நிறத்து வில் ஒன்றினை அவள் கையில் தந்து கலைமான் மீது அமர்வித்தனர். பறவையும், கிளியும், காட்டுக் கோழியும், நீல நிறமயிலும், பந்தும், கழங்கும் தந்து ஏத்தித் துதித்தனர். சுண்ணப் பொடியும், குளிர் சந்தனமும், அவரையும், துவரையும், எள்ளுருண்டையும், கொழுப்புக் கலந்த சோறும், பூவும், புகையும் மற்றும் மணப் பொருள்களும் ஏவல் செய்யும் வேட்டுவப் பெண்கள் ஏந்தி வரச் செய்தனர். வழிப்பறி செய்யுங்கால் கொட்டும் பறையும், சூறையாடும் போது ஊதி ஒலிக்கும் சின்னமும், கொம்பம், குழலும், பெருமை மிக்க மணியும் அனைத்தும் இயைய