பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 வேட்டுவ வரி

'மரவம், பாதிரி, புன்னை, குரவம், கோங்கம் இவை மலர்ந்தன; இவற்றின் கொம்புகளில் வண்டுகள் ஆர்த்தன; அவை யாழ்போல் ஒலி செய்தன' என்று பாடினர்.

அடுத்து அவர்கள் வேடுவர் தம் குலத்தைச் சிறப்பித்துப் பாடினர்.

"கொற்றவை கோலம் கொண்ட இப்பொற்றொடி மாது மிக்க தவம் செய்தவள்; அவள் பிறந்த குலம் அவளால் பெருமை பெற்றது.'

அடுத்துக் கொற்றவையைச் சிறப்பித்துப் பாடத் தொடங்கினர்.

'யானைத் தோலையும், புலித்தோலையும் போர்த்தி எருமைத் தலையின் மேல் ஏறி நின்றவள் நீ! நீ மறைகளையும் கடந்த பொருளாக விளங்குகிறாய். வானவர்கள் உன்னை வணங்குகின்றனர். ஞானக் கொழுந்தாய் நீ விளங்குகின்றாய். அத்தகைய சிறப்பை நீ படைத்துள்ளாய்.”

'கையில் வாள் ஏந்தி மகிடனை அழித்துக் கலைமான் மீது நிற்கின்றாய். அரி, அரன், அயன் இம் மூவர் உள்ளத்தும் நிறைந்தவள். நீ சோதி விளக்காக அவர்கள் உள்ளத்தில் சுடர் விடுகின்றாய்”.

'சங்கும் சக்கரமும் உன் திருக்கையில் தாங்கி நிற்கிறாய். சிங்க ஏற்றில் அமர்ந்து இருக்கின்றாய். கங்கையை முடியில் அணிந்த சிவனின் இடப்பாகத்து உறைகின்றாய். வேதங்கள் உன்னை ஏத்திப் புகழ்கின்றன".

'மற்றும் கொன்றையும் துளவமும் சேரத் தொடுத்த மலர்ப்பிணையலைத் தோள் மேல் இட்டு அசுரர் வாட அமரர் வாழக் குமரிக் கோலத்தில் மரக்கால் கூத்து ஆடிக் காட்டினாய்'.

'நீ மரக்காலில் நின்று ஆடும் போது உன் காற்சிலம்பு ஒலித்தது; சூடகமும், மேகலையும் மாறி மாறி ஒலித்தன. அவுணர்கள் வீழ்ந்தனர். நீ மரக் காலில் ஆடும்போது உன் காயாம் பூ போன்ற மேனியை வாழ்த்தி வானோர் மலர் தூற்றுவர். அது மழை போலப் பொழியும்'.