பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 295

வெற்றிச் சிறப்புகள் விளம்புதல்

'அச்சம் தரும் சீறுார் அதனில் வீரன் ஒருவன் ஆநிரை கவரச் செல்வான் என்றால் வாள் ஏந்திய கொற்றவை அதனை விரும்புவாள் என்பது உறுதி. அவள் அருள் செய்தால் பகைவர் ஊரைச் சார்ந்த காட்டில் கரிக்குருவி தன் கடிய குரலை இசைத்துக் காட்டும்; இது உறுதி.'

'கள் விலை பகர்வோர் கடன் கொடுக்க மறுக்கின்றனர். அதைப் பொறுக்காத மறவன் கையில் வில் ஏந்துகிறான். அவனோடு பறவைகள் அவனைத் தொடர்கின்றன. பகைவர் பசுநிரை கருதி அவன் போகும் காலத்தில் அவன் வில்லின் முன் கொற்றவையும் கொடி எடுத்து அவனுக்கு வெற்றியைத் தர முன் செல்வாள்; இது உறுதி'.

'மாமை நிறம் உடைய இளநங்கையே! வேட்டுவர் மகளே! இதனைக் கேட்டு நீ மகிழ்வாய். இவை நின் ஐயன்மார் முதல் நாள் வேட்டையில் கொண்டு வந்து நிறுத்திய பசுநிரைகள்: அவற்றை வேல் வடித்துத் தந்த கொல்லனுக்கும், போரில் துடிகொட்டிய துடியனுக்கும், யாழ்ப்பாணருக்கும் ஆக இவர்களுக்குத் தந்துள்ளார். அவை அவர்கள் முற்றத்தில் நிற்கின்றன. இவை உன் ஐயன்மார் கொண்டு வந்த கொள்ளைப் பொருள்கள்; வெற்றி விருதுகள்; பரிசுகள்; நீ பெருமை கொள்வாயாக!'.

'முருந்தின் முகை போன்ற முறுவல் உனக்கு அழகு செய்கிறது; நீ இங்கே பார்; உன் தலைவர்கள் கரந்தையராகிய பகையாளிகள் அலறக் கவர்ந்த பசு நிரைகள் இவை; கள்விலையாட்டி, ஒற்று அறிந்து வந்து கூறிய கானவன், புள்நிமித்தம் பொருந்தச் சொன்ன கணியன் இவர்கள் முற்றங்களில் நிறைந்துள்ளன. இது உனக்குப் பெருமை சேர்க்கும்'.

“தாமரை போன்ற அழகிய கண்களை உடைய இளநங்கையே! நின் ஐயன்மார் அயலுார் சென்று ஆநிரைகள் கவர்ந்து வந்துள்ளனர். நரைமுது தாடியை உடையவர்கள்; கடு மொழி பேசியே பழகியவர்கள் நம் வேட்டுவமக்கள்; இந்த எயினர் எயிற்றியர் முன்றில்களில் இந்தப் பசுக்கள் நிறைந்துள்ளன. இச் செல்வம் கண்டு நீ பெருமை கொள்வாய்!”.