பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 297

நாட்டு வாழ்த்து

இறுதியில் அவர்கள் வேட்டுவ வரிப்பாடல் நாட்டு அரசன் வாழ்த்தில் முடிகிறது.

'மறைமுது முதல்வன் ஆகிய சிவபெருமான் அவன் தன் ஆணை கேட்டு அகத்தியன் பொதிகை மலையில் தங்கினான்; அப்பொதிகை மலைக்குத் தலைவனாகிய பாண்டியனின் பகைவர்கள் நாட்டில் போர்க்களமும், கரந்தைப் போரும் சிறப்பதாக. பகைவர்கள் அழிவு பெறுக! பாண்டியன் வெட்சிப் போரில் வெற்றி பெறுவானாக!' என்று அவர்கள் வரிப்பாடல்

முடிவு பெறுகிறது.

13. புறஞ்சேரியில் தங்கிய செய்தி (புறஞ்சேரி இறுத்த காதை)

பயணம் தொடர்தல்

குமரிப் பெண்ணின் கொற்றவை கோலம் நீங்கியது. ஆடிமுடித்து அடங்கிய பின்னர்க் கோவலன் கவுந்தி அடிகள் கால்அடியில் விழுந்து, “இக்கொடிய வெய்யிலில் கடிய வழியில் கொடியனைய கண்ணகி செல்லுதல் இயலாது; பரல் வெங்கானத்தில் அவள் சீறடி படியாது. இரவில் செல்வதே தக்கது' என்று விளக்கிக் கூறினான்.

'மேலும் பாண்டிய நாட்டில் கரடி ஏதும் இடர் செய்யாது; அவை புற்றுகளைத் தோண்டா. புலியும் மான் வேட்டை ஆடாது. பாம்பும், சூர்த் தெய்வமும், முதலையும் தம்மைச் சார்ந்தவரை வருத்துதல் செய்யா. செங்கோன்மை கெடாத சீர்மையுடைய பாண்டியர் காக்கும் நாடு என்று எங்கும் பரவிய புகழோ பெரிது; பகலில் செல்வதை விடப் பல்லுயிர்க்கு ஆதரவாக நிலவு வீசும் இரவிடைச் செல்வது ஏதம் தராது' என்று அவன் தெரிவித்தான்; அதற்கு அவ்வடிகளாரும் இசைவு தந்தனர். கொடுங்கோலின் கீழ்வாழும் குடிகள் அவன் வீழ்ச்சியை எதிர்பார்ப்பது போலக் கதிரவன் சாய்வினை

அவர்கள் எதிர்பார்த்தனர்.