பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 ஊர் காண் காதை

என்பதே இல்லை; மாதரைக் காதலித்து மாதுயர் அடைவோரே இவ்வுலகில் மிகுதியாவர்; அவர்களுக்கே இன்பதுன்பங்கள் மாறி மாறி வருகின்றன. மன்மதன் அவர்களை வாட்டுவான். அவர்கள் அதனால் வாழ்க்கையில் வாட்டம் அடைகின்றவர்; அது இன்று மட்டும் அல்ல; இது மானிட வரலாறு ஆகும். எடுத்துக் காட்டுகள் நம் நாட்டு ஏடுகள் எடுத்துக் காட்டியுள்ளன. தெய்வங்களும் இதற்கு விதி விலக்கு இல்லை.

'பிரமனைப் படைத்த பரமன் இராமன் அவனுக்கே இந்த நிலை எற்பட்டது; தந்தை இட்ட கட்டளை அவனுக்கு அவன் மனைவி ஒரு கால் தளை, அவளோடு கானகம் அடைந்தான். அவன் பட்ட துயரம் இந்த உலகம் அறிந்தது.'

'ஏன்? நளன் கதை எடுத்துக் கொள்; பிணக்கு என்பதே அறியாத 'காதலுக்கு அவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு. அவர்கள் ஏன் பிரிந்தார்கள்? காதலியைக் கானகத்தே காரிருளில் விட்டுப் பிரிந்தான். விதி அவர்களுக்குச் செய்த சதி, அதனால் நேர்ந்தது அந்தக் கதி"

'இவர்களை நோக்க உன் வாழ்க்கை சீர்மை கொண்டது. மனைவி உன்னை விட்டுப் பிரியவில்லை. கிழிந்த கந்தல் வாழ்க்கை தான். ஒட்டுப் போட்டால் சரியாகி விடும்; உங்கள் காதல் வாழ்க்கை சோகம் அடைந்திலது. நீ ஏதம் கொள்வது வீண்' என்று சான்றுகள் காட்டி அவனுக்கு ஆறுதல் கூறினார்.

'கவலை நீங்குக; கூடல் நகரைக் கண்டு நீ திரும்பி வருக! வெல்க' என்று கூறி விடை தந்தார்.

நகர் நுழைதல்

அகழியை அடுத்து மதில் இருந்தது; அகழியைக் கடக்கச் சுருங்கை வழி ஒன்று; அதில் யானைகள் செல்வது வழக்கம். அத்தகைய பரப்பு அது பெற்றிருந்தது. அதனைக் கடந்து மதிலுக்குச் செல்லும் வீதி வழியே சென்றான்; இந்திரன் வைத்திருந்த அணிகலப் பேழை உள் இருந்தது போல நகரின் வளமிகு காட்சி அவன் கண்ணுக்குப் புலப்பட்டது.

யவனர் அரண் காத்து நின்றனர். அவர்களுக்கு ஐயம் எழாதபடி உள்ளுர் வாசிபோல் உள் நுழைந்து சென்றான்.