பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 305

பொழில் விளையாட்டு

தெருக்களில் கொடிகள் அசைந்தன; பொது மகளிர் வீட்டை விட்டுத் தம் காதலர்களுடன் சென்று படகுகளை இயக்கித் தோணிகளில் விளையாடினர். ஆற்றில் நீந்தி மகிழ்ந்தனர். புனல் விளையாட்டில் பொழுது போக்கினர்.

அடுத்துப் பொழில் விளையாட்டில் பொழுது போக்கினர். சோலைகளில் சென்று பூக் கொய்தனர். மலர்களைத் தம் கூந்தலில் சூடிக் கொண்டும், மாலைகளை அணிந்து கொண்டும், சந்தனக்குழம்பு மார்பில் பூசியவராய்ப் பொழில் விளையாட்டில் ஈடுபட்டனர்.

கோவலன் அங்குச் சென்ற காலம் வேனிற்காலத்தின் இறுதியாகும்; நகரத்து மகளிர் இளநிலா முற்றத்தில் தம் காதலருடன் தம் படுக்கையில் கிடந்து பழைய நினைவு களில் மனம் செலுத்தினர். அவற்றுள் முதலாவது கார் காலம்; அது அம் மதுரை நகர மாந்தர் நினைவில் பசுமை நினைவுகளாக நிலைத்து இருந்தது.

கார் காலம்

அந்நகரில் கார்காலத்தில் மாலை வேளைகளில் மகளிர் சிவந்த நிறத்தில் அணிகலன்கள் அணிந்து கொண்டு விளங்கினர். இந்திரனுக்கு இது மதுரை மாநகர் என்பதை அவர்கள் தம் ஆடை அணிகளால் உணர்த்தினர். மாலை வேளைகளில் அவர்கள் தம் காதலருடன் அளவளாவினர். அவர்கள் தம் இடைக்குச் சிவந்த ஆடை அவர்கள் மேனிக்கு அழகு தந்தது; அவர்கள் தலையில் சூடிய பூக்கள் குடசம், செங்கூதாளம், குறிஞ்சி என்பனவாம். இவையும் சிவப்பு நிறப் பூக்களாகும். கொங்கைகளுக்குச் சிவப்பு நிறத்தை உடைய குங்குமம் பூசினர். செங்கோடுவேரி என்னும் பூவும் சிவப்பு நிறம் கொண்டது; அதன் பூக்களைக் கொண்டு மாலை அணிந்தனர். அவர்கள் அணிந்திருந்த மேகலையும் பவழத்தால் ஆகியது. அவர்கள் செவ் வணிகளோடு தம் காதலருடன் கழித்த காலம் அது; மதுரை மாநகர் கார்காலத்தில் விளங்கிய தோற்றம் இது; ஒரே நிறத்தில் அவர்கள் திறம் விளங்கியது. இது ஒரு தனிச் சிறப்பாக விளங்கியது. இது கார்காலத்து மகளிர் மகிழ்வுடன் இருந்த நிலை.