பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 313

அவனை அவள்கண்முன் அடித்துக் கொன்றது. மனம் ஒடிந்து போனதால் நொடிந்து போனாள்; திக்கற்ற அவளுக்குத் திசை காட்டும் ஒளிக் கதிராகக் கோவலன் இருந்து அத் தாய்க்கும் மற்றும் அவனைச் சார்ந்து கிடந்த சுற்றத்தவர்க்கும் உறுபொருள் கொடுத்து அவர்கள் வாழ்நாள் முழுவதும் காத்து ஒம்பினான். அதனால் இல்லோர் செம்மல்" என்று நல்லோர் அவனைப் பாராட்டிக் கூறினர்.

ஈகையும் வீரமும் உடைய அவன் வாழ்வு நசிந்து போனது கண்டு கசிந்து வருந்தினான் மாடலன். 'இம்மையில் எந்தத் தீமையும் நீ செய்தது யான் கண்டது இல்லை; சென்ற பிறவியில் செய்த தீ வினைதான் ஏதோ ஒன்று பாழினை நல்கியது' என்று ஆறுதல் கூறினான். 'கண்ணகியும் கடுங்கான் வந்து உழந்தது வருந்தத் தக்கது' என்றான்.

கோவலன் கனவு

மாடலன் பரிவுடன் பேசிய பாங்கு கோவலன் உள்ளத்தை உடைத்து அவன் உணர்வை வெளிப்படுத்தியது. வாழ்க்கை அச்சம் அவனைக் கைக் கொண்டது. தான் கண்ட கனவினை மாடலனிடம் கூறிப் பகிர்ந்து கொண்டான்; குறுமகன் சூழ்ச்சியால் தான் பெறு துயர் இது' என்று நவின்றான்; கனவின் விளக்கம் இது: 'கண்ணகி நடுங்கித் துயர் அடைகிறாள்; அவன் எருமைமீது ஊர்ந்து செல்கிறான்; அவன் ஆடையை மற்றவர்கள் பறித்துக் கொள்கின்றனர்; கண்ணகியும் அவனும் பற்று நீங்கியோர் அடையும் வீட்டு உலகை அடைகின்றனர். மாதவி மணிமேகலையைத் துறவியாக்குகிறாள்; மன்மதன் தன் வில் அம்பினை வெறு நிலத்தில் வீசி எறிகிறான். மணிமேகலை மாபெரும் துறவி ஆகிறாள்' நனவில் காண்பது போல் இக்கனவு அவனுக்கு அமைந்தது. அதனை மாடலனிடம் எடுத்து உரைத்தான்.

இனி அடுத்து அவர்கள் அங்கு அவ் அறப்பள்ளியில் தங்க இயலாது என்று இருவரும் எடுத்து உரைத்தனர். 'வணிகப் பெருமக்கள் உங்களை ஏற்று உபசரிப்பர்; அதனால் இப்புறநகர் விட்டுக் கதிரவன் மறைவதற்கு முன் அக நகர் செல்வதுதான் தக்கது' என்று கூறினர்.