பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 315

பழங்கதை கூறல்

'மற்றும் ஒரு தவசியாகிய யான் தரும் அடைக்கலப் பொருள் இது; இது சிறு உதவியாயினும் அதனால் விளையும் நன்மை உனக்குப் பெரிது ஆகும்; இது உனக்குப் பெருவாழ்வு தரும் என்பது உறுதி; இதற்கு எடுத்துக் காட்டாகக் கூற வேண்டுமானால் இந்நிகழ்ச்சியைக் கூறலாம் :

'இது பழங்கதை; படிப்பினையைத் தரும் விதை; செவிமடுத்துக் கேட்பாயாக' என்று கூறினார்.

'காவிரிப் பூம்பட்டினத்தில் சமணமுனிவர்களுக்காக இட்ட சிலாதலத்தில் முனிவர்கள் சிலர் வந்து வழக்கம் போலத் தங்கினர். அவர்கள் முன் ஒளிபடைத்த தெய்வமேனியன் ஒருவன் வந்தான். அவனைக் கண்டு அதிசயித்தவர்கள், யார் இவன்? அங்கு வருவதற்கு இவன் வரலாறு யாது?’ என்று வினவினர்; அதற்கு அச் சாரணர் தந்த விளக்கம் இது :

அவன் கை விரல் கருவிரலாக இருந்தது. அது ஒரு குரங்கின் கையாக இருந்தது. வானவன் வடிவில் வந்திருந்தான். இது வியப்பை அளித்தது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு அமைந்திருந்தது. அதனை முனிவர்கள் விளக்கினார்கள்:

“எட்டிப் பட்டத்தைப் பெற்ற சாயலன் என்ற வணிகன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி தானம் பல தந்து தரும வழியில் நின்றாள். ஒரு தவ முனிவன் உண்ண வந்திருந்தான். அவனுடன் ஒரு குரங்கு ஒட்டிக் கொண்டு உடன்வந்தது. அவன் தின்றுஉமிழ்ந்த மிச்சிலை உண்டு அது பசி தீர்ந்தது. அதன் முகமலர்ச்சியைக் கண்டு அகம் மலர்ந்த அம் முனிவன் 'தொடர்ந்து அக்குரங்கைச் சொந்த மகன் போலப் போற்றி அதற்கு உணவிடுக' என்று கேட்டுக் கொண்டான்.

அக் குரங்கு வாழ்நாள் முழுவதும் அவ் வீட்டில் இருந்து பின் இறந்தது. இறந்தபிறகும் 'அது நல் வாழ்வு பெறுக' என்று தானம் செய்தனர். அதன் விளைவால் அக்குரங்கு மத்திம நாட்டில் வாரணாசி என்னும் நகரத்து அரசன் உத்தரகெளத்தன் என்பானின் மகனாகப் பிறந்தது. அங்குப் பல காலம் வாழ்ந்து தானங்கள் பல செய்து பின் தேவர் உலகம் அடைந்தான்.