பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 அடைக்கலக் காதை

அவன்தான் இந்தக் குரங்குக் கையோடு கூடிய வானவன் என்று அங்கு வந்த சாவகர்க்குச் சாரணர் தலைவன் உணர்த்தினான். இந்தச் செய்தியைக் கவுந்தி அடிகள் கூறினார்.

வானவன் ஆகிய போதும் அந்த எட்டிச்சாயலன் மனைவி இட்ட தானத்தின் பயன் இது என்று காட்டக் குரங்கின் கைவிரலைத் தான் பெறுவதைச் சிறப்பாகக் கொண்டான்.அந்த வடிவத்தோடு அங்கு வந்திருந்தான் என்ற செய்தியைச் சாவகர்க்கு எல்லாம் சமணமுனிவர் விளக்கினார்.

சாரணர் கூறிய தகுதி மிக்க கதையைக் கேட்டவர்களும், தானம் இட்ட எட்டிச் சாயலனும், அவன் மனைவியும் விண்ணுலகப் பேரின்ப வாழ்வு பெற்றனர்' என்ற செய்தியைக் கவுந்தி அடிகள் கூறினார்.

'இந்தக்கதையைக் கேட்டாய்; அதனால் இதன் பயன் அறிகின்றாய். நீ இனி நீட்டித்து இராமல் இவர்களை அழைத்துச் செல்க' என்று கூறினார். அவளும் கண்ணகியை அழைத்துக் கொண்டு பொழுது சாயும் நேரத்தில் தம் வீட்டுக்குச் செல்ல முற்பட்டாள்.

கன்றை நினைத்துக் கொண்டு வீடுதிரும்பும் பசுக்கள் உடன் சென்றன. அவற்றைச் செலுத்தும் இடையர் ஆட்டுக் குட்டியைத் தோளில் சுமந்தவராய் உடன் சென்றனர். அவர்கள் கையில் கோடரி வைத்திருந்தனர்; ஆய்ச்சியரும் ஒரு சிலர் அவருடன் சென்றனர்; பொறிகள் பல வைத்துக் காவல் செய்த மதிலின் வாயிலுள் சென்று அக நகரில் மாதரி கண்ணகி கோவலனோடு தம் மனையை அடைந்தாள்.

16. கோவலன் கொலை யுண்ணல் (கொலைக் களக் காதை)

மனை வகுத்துத் தருதல்

கண்ணகியை அடைக்கலம் பெற்ற இடைக்குல மடந்தை ஆய்ச்சியர் மனையில் அவளை வைக்காமல் தனி வீடு அமைத்து அவளுக்குத் துணையாக ஆய்ச்சியர் சிலரை உடன் அனுப்பி வைத்தாள். அவர்களைக் கொண்டு அவளை நீராட்டினாள்.