பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 319

மனத்தைத் திறந்து காட்டினாள். அவன் பிரிவில் தனக்கு ஏற்பட்ட துயரை அவள் எடுத்துக் கூறவில்லை. பெற்றோர்கள் அடைந்த வருத்தத்தை மட்டும் குறிப்பிட்டாள். 'இல்வாழ்க்கையின் மையக் கூறு அறம் செய்தல்; அறவோரை எதிர்கொள்ள முடியாமல் ஆகிவிட்டது; விருந்தினரை அருந்தச் செய்யவில்லை; இது தான் பேரிழப்பு' என்று பேசினாள்.

'மற்றும் உன் பெற்றோர்கள் வந்து விசாரித்த போது விசனத்தைக் காட்டாமல் வியர்த்தமாகச் சிரித்தேன். அது வலிய வரவழைத்துக் கொண்ட பொய்ச் சிரிப்பு என்பதை அவர்கள் அறிந்தார்கள். அது அவர்கள் உள்ளத்தை உறுத்தியது. நீர் போற்றா ஒழுக்கம் விரும்பினர்; அது உங்கள் உரிமை, அதனை மறுத்து உரைப்பது எனக்கு உகந்தது அன்று. எப்பொழுதும் மறுத்துப் பேசியது இல்லை; அதனால் ஏற்று எழுந்தேன்” என்று அவள் பதில் கூறினாள். அன்பும் அருளும் கொண்டு அவன் பெற்றோர்கள் தனக்கு ஆறுதல் கூறி வந்தனர் என்பதையும் தெரிவித்தாள். பெண்டிர்க்கு அழகு எதிர்பேசாதிருத்தல் என்பதை அவள் கூற்றுக் காட்டியது. மாறுபடத் தான் என்றுமே நடந்து கொண்டது இல்லை என்று நவின்றாள்.

அது அவன் உள்ளத்தைத் தொட்டது; அவள் எத்தகைய தியாகத்தை மேற்கொண்டாள்? அவளால் எப்படிச் செல்வ வாழ்க்கையைத் துறக்க முடிந்தது? என்று எண்ணிப் பார்த்தான்; 'குடிமுதல்சுற்றமும், குற்றிளையரும், அடியோர் பாங்கும், ஆயமும் சூழ்ந்த பாதுகாப்பான வாழ்க்கையை விட்டு எப்படி அவளால் வர முடிந்தது? நினைத்திருந்தால் அவள் இந்த வசதிகளோடு வீட்டிலேயே தங்கிவிட்டு இருக்கலாம். அவளுக்குத் துணையாக இருந்தவை யாவை?

நாணமும், மடனும், நல்லோர் பாராட்டும் கற்புத் திறனும் இவைதாம் துணையாயின என்பதை உணர்கிறான். புறச்சுற்றம் அவளை அணைக்க வில்லை. அகச்சுற்றம் அவள் மனக் கோட்பாடு. அது அவளுக்குத் துணை செய்தது. உள்ளப்பாங்கு அவளை இயக்கியது என்பதை உணர்ந்து பேசினான்.

கோவலன் பாராட்டுரை

'மாசறு பொன்னே வலம்புரிமுத்தே' என்று பாராட்டிய அவன் இப்பொழுது அவள் குணநலன்களை வியந்தான்.