பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 கொலைக் களக் காதை

கவரும் வேட்கையில் கடும்புலிபோல் நடு இரவில் ஊரவர் துயின்று கொண்டிருந்த நேரத்தில் வந்திருந்தான். என் கைவாள் எடுத்தேன். அவன் அதைத் தடுத்துப் பற்றிக்கொண்டான். அடுத்து அவனைத் தேடினேன். எங்கும் அவன் எனக்கு அகப்படவே இல்லை. இவர்கள் செயல் அற்புதமானது, அறிய இயலாதது” என்று மிகைப்படுத்திக் கூறினான்.

"இவன் தப்பித்துச் சென்றால் நம் உயிர் தப்புவது அரிது; அரசன் நம்மை மன்னிக்கமாட்டான்; அவனா நாமா யார் உயிர் தப்புவது என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்; சிந்தித்துச் செயல் படுங்கள்' என்றான் அக் கொலைஞன்.

இறுதி அவலம்

சிந்திக்க அவர்களுக்கு நேரம் இல்லை; அச்சம் அவர்களை ஆட் கொண்டது; கோவலன் உயிரைத் துச்சம் என மதித்தனர். கல்லாத குடியன் முரடன் ஒருவன் தன் கைவாள் எடுத்தான்; அவன் வாழ்வை முடித்தான். மார்பில் குருதி கொட்டியது; மாநில மடந்தை துயர் அடைந்தாள்.

பாண்டியன் செங்கோல் வளைந்தது; கோவலன் தரையில் விழுந்தான்; இவற்றிற்கு எல்லாம் காரணம் அவன் பழைய வினைதான்; வேறு என்ன இருக்க முடியும்?

நல்வினையையே நாடிச் செயல் புரிந்தால் கேடு வருவது இல்லை. கண்ணகியின் கணவன் அவன் அவல முடிவு உலகுக்கு ஒரு படிப்பினையாகும்; அவன் பழம்பிறப்பில் செய்த தீவினை இப்பிறப்பில் அவன் வாழ்வினைப் பறித்துக்கொண்டது. அது மட்டுமா? வளையாத செங்கோலும் வளைந்தது; அதற்கு அப்பாண்டியன் செய்த பழவினையே காரணம் ஆகும்.

17. ஆய்ச்சியர் குரவை யாடுதல் (ஆய்ச்சியர் குரவை)

இமயத்தில் மீன்கொடி ஏற்றியவன் பாண்டியன்; அவனை அடுத்துச் சோழர் புலிக்கொடியையும், சேரர் வில் கொடியையும் ஏற்றினர். தமிழர் வெற்றி நாவலந்தீவு முழுவதும் பரவியது.