பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 வழக்குரை காதை

இவற்றை எடுத்துக்கூறி 'அடுத்து என்ன நடக்குமோ என்று அரசி அஞ்சினாள். 'இதனை மன்னவனுக்கு அறிவிப்போம்' என்று கூறினாள். தன்னை அந்தப்புரத்துப் பரிவாரப் பணிப்பெண்கள் சூழ்ந்துவர அரசி மன்னன் அவையை அணுகினாள். 'அரசி கோப்பெருந்தேவி வாழ்க’ என அறிவித்த வண்ணம் ஆயத்தவர் அரசியோடு அரசனை அணுகினர். பாண்டிமாதேவி அரசனுக்குத் தான் கண்ட தீக்கனவை எடுத்து உரைத்தாள். அரசன் அதனை அமைதியாகக் கேட்டுக் கொண்டு அரியாசனத்தில் அமர்ந்திருந்தான்.

வாயிலோனை விளித்தல்

வெளியே கடுமையான குரலில் கண்ணகி வாயிற் காவலனை விளித்துக் கூறினாள்; "வாயில் காப்பவனே! அறிவிழந்து நெறிதவறிய அரசனின் காவலன் நீ! நீ சென்று அறிவிப்பாயாக! கையில் ஒற்றைச் சிலம்பை ஏந்திக் கற்றைக் குழலாள் ஒருத்தி கணவனை இழந்து வாசற் கடையில் நின்று கதறுகின்றாள் என்று அறிவிப்பாய்” என்று ஆணையிட்டாள்.

அவன் உள்ளே சென்று வாழ்த்துக் கூறி அரசனிடம் வந்தவளைப்பற்றி அடித்து விழுந்து கொண்டு அலறிய வண்ணம் தெரிவித்தான். 'கணவனை இழந்தவள் வாயிற் கடையில் வந்து நிற்கிறாள்; அச்சம் தரும் வடிவில் அவள் காணப்படுகிறாள். தாருகனின் மார்பைக் கிழித்த பேர்உரம் படைத்த காளிபோலக் காட்சி தருகிறாள். ஆவேசம் கொண்டவளாக இருக்கிறாள்' என்று அறிவித்தான்.

வழக்கு உரைத்தல்

'அவளை உள்ளே வரவிடுக' என்று அரசன் கூற வாயிற்காவலன் அவளை அழைத்துச் சென்று உள்ளே வர விட்டான். மன்னவனைக் கண்டாள்; அவன் இவள் கண்ணிரைக் கண்டு கருத்து அறிய விழைந்தான். 'இளநங்கையே நீ யார்?' கண்ணிரோடு கலங்குவது ஏன்?' என்று வினவினான். அவள் அதிர்ந்திடும் மொழியில் தான் யார் என்பதையும், தன் வழக்கு யாது என்பதையும் அடுக்கி வைத்துக் கூறினாள்.

'ஆராயாது தீர்ப்புக் கூறிய அரசன் நீ சோழ நாட்டு மகள் நான் ; புறாவிற்காகத் தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச்