பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 வஞ்சின மாலை

'பழங்கதை இது, வண்டல் அயர்ந்து விளையாடிய சிறுமியர்கள் அவர்கள் வேடிக்கையாகப் பேசிக் கொண்டார்கள்; ஒருத்தி சொன்னாள்,' எனக்கு ஒரு மகள் பிறந்து உனக்கும் ஒரு மகன் பிறந்து இருவரும் பெரியவர்கள் ஆவார் எனின் அவனுக்கு என் மகள் வாழ்க்கைப்படுவாள்' என்று சொல்லி விட்டாள். காலம் சென்றது; தன் மகள் மணப்பருவம் அடைந் தாள். அவளைத் தான் கூறியபடிதன் தோழியின் மகனுக்குத் தரவேண்டும். ஏற்றத் தாழ்வுகள் இருவரையும் பிரித்து விட்டன. இதை எப்படித் தன் கணவனிடம் கூறுவது? தயங்கித் தயங்கி இதனைத் தன் கணவனிடம் கூறினாள். அதைக் கேட்டாள் அந்த மகள்; உடனே கூறை உடுத்து மணப்பெண்கோலம் ஏற்று அந்த வீட்டு மகன் முன் மணப்பெண்ணாக நின்றாள். அவன்தான் தன் கணவன் என்று உறுதியாக நின்றாள். ஒருமுறை ஒருவனைக் கணவனாக வரித்தது என்றால் அதனை மாற்றாது உறுதியாக அவள் நடந்து கொண்டாள்; இந்தக் கதை எம் நகரத்தில் காலம் காலமாகப் பேசப்படுகிறது'.

இவ் எழுவர்தம் கதைகளையும் எழில் உற எடுத்துக் கூறி இத்தகைய கற்புடைய பெண்கள் பிறந்த நகரில் தான் பிறந்ததாகவும், தானும் அவர்கள் வழிவந்த கற்புடைய மாது என்றும் கூறினாள்.

கண்ணகி அலறல்

“யானும் ஒரு கற்புடைய பெண் என்பது உறுதியானால் யானும் அற்புதம் நிகழ்விப்பேன்; இந்த அரசை அடியோடு அழிப்பேன். இந் நகரையும் முழுவதும் எரிப்பேன்; என் செயல் திறத்தை நீ காண்பாய்' என்று கூறி அரசவையை விட்டு அகன்றாள்.

நகருக்குள் வந்தாள். "நான்மாடக்கூடல் மகளிர்களே! வானில் வாழும் தேவர்களே! தவசிகளே! கேளுங்கள். யான் போற்றும் காதலனுக்குக் கேடு சூழ்ந்த மன்னனையும், அந் நகரையும் சீறினேன்; யான் குற்றம் செய்யவில்லை; என் செயல் பழுது ஆகாது' என்று கூறினாள். தன் இட முலையைக் கையால் திருகிப் பிய்த்து எடுத்து நகரை வலம் வந்தாள். மும் முறை சுற்றினாள்: மணம் மிக்க மதுரை மாநகர்த்தெருவில் அலமந்து தன் முலையை வட்டித்து எறிந்தாள்.