பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 341

ஆடு அரங்குகளில் கலை நிகழ்ச்சிகள் நின்று விட்டன; அவர்கள், 'வந்தவள் யார் ? எந் நாட்டவள் ? அரசனை எதிர்த்து வென்று தீ மூட்டினாள்; அவள் வியப்புக்கு உரியள்' என்று அவர்கள் நயப்புடன் உரை நிகழ்த்தினர். ஊரில் விழாக்கள் நின்றன; வேத முழக்கம் நின்றது; செந் தீ வேட்டலும், தேவபாடலும், மகளிர் மங்கல விளக்கு ஏற்றிவைப்பதும், மாலை மகிழ்வும், முரசு அறைவும் நின்றுவிட்டன.

அவல நிலை

கண்ணகி என்ன ஆயினாள்? அவள் நிலை யாது? காதலனை இழந்த துன்பம் அதற்குக் கரையே காண இயலவில்லை. கொல்லன் துருத்திபோல் வெய்து உயிர்த்தாள். மறுகுகளில் மறுகினாள்; கவலை கொண்டாள்; நடப்பாள்; திடீர் என நிற்பாள்; மயங்குவாள்; தெளிவு பெற்றவள் போல் நடப்பாள்; மிக்க துன்பம் உற்ற வீரபத்தினியாக நின்றாள்.

அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் தெய்வங்கள் என அவளை மதித்து மதுராபதி தெய்வம் போற்றியது. நெருப்புக்கு அஞ்சி அவளை அடைக்கலமாகப் பின் வந்து நின்றது.

23. விதிப்பயன் எனல் (கட்டுரை காதை)

மதுரைத் தெய்வம்

மதுரை நகர் ஒரு மங்கை வடிவம் கொண்டு கண்ணகியின் பின்புறம் வந்து நின்றது. சடைமுடி தரித்திருந்தாள். சிவனைப்போல் பிறை தரித்திருந்தாள். குவளை மலர் போன்ற கண்கள், ஒளிபடைத்த முகத்தினள்; கடைவாயில் பல் வளைந்து வெளிப்பட்டுத் தோன்றியது; பவள வாயள்; முத்துப் போன்ற பற்கள்; இடப்பக்கம் கருப்பு: வலப்புறம் சிவப்புப் பொன்னிறம் பெற்றிருந்தாள். உமைபாகன் வடிவம் அவளுடையது. இடக் கையில் தாமரைமலர்; வலக்கையில் கொடுவாள்; வலக்காலில் வீரக்கழல்; இடக்காலில் கால்சிலம்பு; பாண்டியனின் குலமுதல்வி அவள். அவள் வருத்தத்துடன் கண்ணகி முன் நிற்க அஞ்சிப் பின் தொடர்ந்தாள்.