பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 351

அவை: யானைத் தந்தம், அகில் கட்டை, மான்கவரி, சந்தனக் கட்டை, சிந்துரக்கட்டி, அஞ்சனத்திரள், அரிதாரம், ஏலக்கொடி, மிளகுக் கொடி, கவலைக்கொடி, கிழங்குகள், வெள்ளுள்ளி எனப்படும் காயம், தேங்காய், மா, பலா முதலியன, கரும்பு, பூங்கொத்துகள், கமுகத் தாறு, வாழைத்தாறு, யானை, சிங்கம், புலிக்குட்டிகள், யானைக்குட்டிகள், குரங்குக் குட்டிகள், கரடிக் குட்டிகள், மலையாட்டுக் குட்டிகள், மான்குட்டிகள், கீரிப் பிள்ளைகள், மயில்கள், பூனைக்குட்டிகள், காட்டுக்கோழி, கிளிகள் இவற்றையெல்லாம் சுமந்து வந்து குவித்தனர். "ஏழ் பிறப்பும் உமக்கு அடிமை செய்வோம்' என்று கூறியவராய்த் தொழுதனர். "நறு வேங்கை மரத்தின் நிழலில் காரிகையாள் ஒருத்தி முலை இழந்தவளாய்த் தனித்துயர் அடைந்து வானவர் வரவேற்கத் தன் கணவனோடு சேர்ந்து வானகம் சேர்ந்தாள். அவள் எந்நாட்டாள்? யார் மகள்? அறிய இயலவில்லை. அவள் இந்நாட்டில் பிறந்த நங்கை என்று கூற இயலாது; புதியவளாக இருக்கின்றாள்' என்று நவின்றனர். மன்னனைப் 'பல்லாண்டு கள் வாழ்க’ என்று வாழ்த்துத் தெரிவித்தனர்.

சாத்தனார் உரை

அரசன் அருகில் இருந்த சாத்தனார் என்னும் தமிழ்ப் புலவர் இவற்றைக் கண்குளிரக் கண்டு மகிழ்ந்திருந்தார். "அவள் யார்? எந்நாட்டவள்” என்று அரசன் கேட்டதற்கு அவர் விளக்கம்

கூறினார்.

'சிலம்பு விற்கச் சென்றவன் கோவலன் என்பான் தீவினை காரணமாக வாழ்வினை இழந்தான்; அவன் மனைவி கண்ணகி; அவள் சிலம்பு ஒன்று கையில் ஏந்தி மன்னன் அவைக்களம் புகுந்தாள்; வழக்கில் வென்றாள்; பாண்டியன் சாய்ந்தான்; வீழ்ச்சியுற்ற பாண்டி மாதேவியின் முன் 'அரசையும் நகரையும் அழிப்பேன்' என்று சூள் உரைத்து மதுரையைச் சுட்டாள். பாண்டி மாதேவி கணவனோடு தானும் சேர்ந்து உயிர்விட்டாள். அவள் உயிர்விட்டது தன் உயிரைக் கொண்டு அவன் உயிரைத் தேடிச் சென்றது போல இருந்தது. வெற்றி வேந்தன் பாண்டியன் அவன் கொற்றம் இத்தகையது என்று சாற்றுவதற்கு வந்தவள் போல் நின்னாட்டு அகம் இவள் வந்து சேர்ந்தாள். தன் நாட்டுக்கு அவள் சென்றிலள்; வாழ்க நின் கொற்றம்' என்று அவர் விளக்கம் தந்தார்.