பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 357

வாகைப் பூவும், தும்பைப் பூவும் சூடிப் பொலிவு பெறுக' என்று வாழ்த்தினர்.

"எங்கள் கண்களைக் கவரும் பேரழகு பெற்றிருக்கிறாய்! உன்னைக் கண்டு காதல் கொண்டு எம் வளையல்களை இழக்கின்றோம். இந்த நிலை என்றும் தொடர்க' என்றும் சிறப்பித்து அவர்கள் வாழ்த்துதல் தெரிவித்தனர்.

மற்றும் மாகதப் புலவரும், வைதாளிகரும், சூதர் எனப்பட்டவரும், 'வெற்றி பெறுக’ எனக் கூறி வாழ்த்தினர்.

யானை வீரரும், குதிரைத் தலைவரும், வாள் வீரரும் இவன் வாளாற்றலை ஏத்திப் புகழ்ந்தனர். அசுரரை அழிக்கச் சென்ற இந்திரனைப் போல் வஞ்சி நகரை விட்டு நீங்கித் தம் படைகளுடன் நீலகிரி மலையைச் சேர்ந்தான். அங்கே பாடி வீடு அமைத்துச் சிம்மாசனத்தில் அமர்ந்தான்.

நீலகிரியில் சேர மன்னன்

படை இயங்கு அரவம் விண்ணையும் முட்டியது; அதனைக் கண்டு வானத்து முனிவர்கள் விசும்பினின்று இறங்கி வந்து இவனைக் காண விழைந்தனர். மின்னல் ஒளிபோல் அவர்கள் காட்சி அளித்தனர். அவர்களை வணங்கி வேண்டுவது யாது என்று கேட்டனன். அவர்கள் "யாம் பொதிகை மலை செல்கின்றோம்; வழியில் உன்னைக் காணும் வாய்ப்பு நேர்ந்தது; நீ இமயம் ஏகுகின்றாய் என்பதை அறிகிறோம். அங்கே மறைகற்ற அந்தணர் உள்ளனர்; அவர்களுக்கு எந்தக் குறையும் நேராமல் காப்பது நின் கடமை' என்று கூறினர்; அவனை வாழ்த்தி விட்டுச் சென்றனர்.

அதன் பின் கொங்கணக் கூத்தரும், கருநாடகக் கலைஞர்களும் தத்தம் துணைவியருடன் வந்து இருந்து பாடல் பாடினர். "வேனில் காலம் வந்தது; ஆனால் காதலன் வந்திலன்' என்ற கருத்துடைய பாடல்களைப் பாடினர். மற்றும் 'கார்காலம் வந்தது. காதலன் தேரும் வந்தது; மகளிர் கோலம் கொள்க' என்றும் குடகர்கள் கார்க்குரவை என்னும் வரிப்பாடலைப் பாடினர்; "வாள்வினை முடித்து வெற்றியுடன் வருக' என்று