பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 359

சஞ்சயன் சென்றான்; அதன்பின் தென்னவர் இட்ட திறை என்று சொல்லிச் சந்தனக் குப்பையும், முத்துக் குவியலும் சட்டை அணிந்த நாவன்மை படைத்தவர் ஆயிரவர் கொண்டு வந்து அளந்து தந்தனர். தென்னவன் தந்தவை எனச் சாற்றினர். அவற்றைப் பெற்றதற்கு ஒப்புதல் தெரிவித்துச் சேரன் தன் அரசு முத்திரை இட்ட முடங்கல்களை அவருக்கு ஆட்கள் வழி அனுப்பினான். கணக்கு எழுதுவோர் இவற்றைக் குறித்துக் கொண்டு ஒப்புதல் எழுதி அனுப்பினர்.

வட நாடு அடைதல்

அதன் பின் நீலகிரியை விட்டு நீங்கி வடநாடு செல்லக் கங்கையைக் கடந்தான்; நூற்றுவர் கன்னர் இவனுக்குக் கரையைக் கடக்கப் படகுகளை அனுப்பி வைத்தனர். அடுத்த கரையில் அவர்கள் இவன் வரவுக்காகக் காத்து நின்றனர். அவர்களையும் துணையாக அழைத்துக் கொண்டு வடநாட்டை அடைந்து அங்குப் பாடி வீடு அமைத்துக் கொண்டு அங்குத் தங்கினான்.

போர் நிகழ்ச்சிகள்

சேரனை எதிர்த்த வட ஆரிய வேந்தர்கள் ஆகிய உத்திரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்திரன், சிவேதன் ஆகிய இவர்கள் தென்தமிழ் ஆற்றலைக் காண்போம் எனத் திரண்டு எழுந்தனர். அவர்களோடு கனகனும் விசயனும் கனத்த சேனையுடன் சேர்ந்து கொண்டனர். களிற்றைக் காயும் சிங்கத்தைப் போன்று சேரன் சீறி எழுந்தான். பல்வேறு மன்னர்கள் எதிர் ஊன்றித் தடுக்க அவர்களை எதிர்த்துப் போர் செய்து வெற்றி முழக்கம் செய்தான். இவன் தங்கிய பாடி வீடு கொடிகள் பந்தல் இட்டதுபோல் அமைந்தன. இடிபோல இவன் படைகள் எழுப்பிய முழக்கம் எழுந்தது; முரசுகள் அதிர்ந்தன; வில் ஏந்திய வீரரும், வேல் தாங்கிய வீரரும், கிடுகுப்படை யாளரும், தேர் ஊர்வோரும், யானையர், குதிரையர் இவர்களும் மண்ணில் எழுப்பிய பெருந்துகள் யானைக்குக் கட்டிய மணிநாவையும், கொடிகளில் கட்டிய சங்குகளின் நாவையும் அசையாதவாறு தடுத்து நிறைத்தது.