பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 கால்கோள் காதை

முன்னணியில் இருந்த தூசிப் படைகள் ஒன்றோடு ஒன்று முரணித் தாக்கிக் கொண்டன; தோளும் தலையும் துணிபட்டு வேறு வேறாக விழுந்தன; தலை இழந்த முண்டங்கள் பேய்கள் இட்ட தாளத்துக்கு ஏற்பக் கூத்து ஆடின. பிணம் சுமந்து ஒழுகிய குருதிக் குட்டையில் பேய்க் கூட்டம் கூந்தலை விரித்துப் போட்டு நீராடின.

ஆரிய அரசர்தம் படைகளைச் சேரன் கொன்று குவித்தான்; அவர்கள் தேர்கள் களிறுகள் குதிரைகள் சாய்ந்து விழுந்தன. ஒரே பகலில் உயிர்க் கூட்டத்தை இயமன் உண்ண இயலும் என்பதைக் கனகவிசயர் அன்று கண்டறிந்தனர். பகைவர்களைக் கொன்று குவித்த மாவீரனாகச் சேரன் திகழ்ந்தான். பனம்பூ மாலையோடு தும்பையும் அங்கு சூடிச் சிறப்புப் பெற்றான்.

திமிர் பிடித்துத் தமிழரசரை இகழ்ந்த கனகனும் விசயனும் நூற்றுவர் அரசர்களும் இவன் சினத்துக்கு ஆளாயினர்; ஏனையவர்கள் ஆடும் கூத்தரைப் போலவும், நாடும் தவத்தவர் போலவும் பல்வேறு வேடங்கள் தாங்கித் தப்பித்துச் சென்றனர்.

வாள்.ஏர் உழவன் ஆகிய செங்குட்டுவன் தன் மறக்களத்தை வாழ்த்திப் பேய்கள் பரணி பாடின. அவை மடிந்த வீரர்களின் கைகளைத் தூக்கிப் பிடித்தும், அவர் முடியுடைய தலைகளைத் தூக்கி எறிந்தும் போர்ப் பாடலைப் பாடின. கடலைக் கலக்கி அமுதம் கடைந்து எடுத்த நாளில் தேவர் அசுரப் போர் பதினெட்டு ஆண்டுகள் நடைபெற்றது. இலங்கையில் இராமன் இராவணனோடு நிகழ்த்திய போர் பதினெட்டுத் திங்கள் நடந்தது. கண்ணன் தேர்செலுத்தப் பாண்டவர்கள் நடத்திய போர் பதினெட்டு நாட்கள் நடைபெற்றது. அந்தப் போர்களின் சிறப்புகளைச் சீர்வரிசையில் செப்பி இவன் பேரிசையைப் புகழ்ந்து பாடின.

பேய்கள் கூத்து ஆடி மகிழ்ந்தன. இவன் வெற்றிப் புகழைப் பாடிச் சிறப்பித்தன. மறக்கள வேள்வி முடித்த வேந்தன் அங்கு 'வேள்விகள் ஒம்பிய மறையவர்க்குத் தக்க வகையில் உதவி அவர்களுக்குச் சிறப்புச் செய்க' என்று ஆட்களை அனுப்பினான். அதன்பின் வில்லவன் கோதை என்னும் அமைச்சனோடு வீரர்களை அனுப்பி இமயத்து