பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 363

சீற்றம் கொண்டு நீதிக்குப் போராடி வழக்கில் வென்று பாண்டியனைத் துயரில் ஆழ்த்தினாள். அவன் உயிர்விட்டான்; மதுரை எரிந்தது. நின்னாடு புகுந்த அப்பத்தினித் தெய்வம் இன்று கல்லாக அமைந்து இவர்கள் முடிமீது எறினாள்' என்று கதையைக் கூறினான்.

இது கடந்த செய்தி, அதனைக் கூறிமுடித்து அதன் பின் தான் கங்கைக் கரைக்கு வந்தது ஏன் என்ற சங்கையைத் தீர்க்கத் தொடங்கினான்.

அகத்தியன் வாழ் பொதிகை மலையை வலங் கொண்டு குமரியில் நீராடி வந்தான். வழியில் பாண்டிய நாட்டை அடைந்து அங்கு நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கேள்வியுற்றான். அங்குச் சென்றதற்காகத் தன் ஊழ்வினையை அவன் நொந்து கொண்டான்.

தென்னவனை வழக்காடி வென்று கோவலன் பிழை யற்றவன் என்பதைக் கண்ணகி நிறுவினாள். அடைக்கலமாகக் கண்ணகியை இடைக்குல மகள் பெற்றிருந்தாள். அவர்களைத் தான் காக்க முடியவில்லை; அவர்களுக்குக் கேடு நிகழ்ந்தது தன்னால்தான் என்று வருந்திய மாதரி எரியகம் புகுந்து உயிர் நீத்தாள். அதிர்ச்சி மிக்க செய்தியாக இது மாடலனுக்கு அமைந்தது.

தீயது செய்த வேந்தன் தன் உயிரைவிட்டுப் பாவ மன்னிப்புப் பெற்றுவிட்டான். தன் உடன் வந்த உத்தமர்களுக்கு அழிவு வரத் தானும் உடந்தை என்று கருதிய கவுந்தி அடிகள் அதற்கு ஈடாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். உண்ணாநோன்பு ஏற்று உயிரை விட்டார். இது அடுத்த அதிர்ச்சி மிக்க செய்தியாகிவிட்டது.

அடுத்து மாடலன் தன் சொந்த நாடாகிய சோழ நாட்டை அடைந்தான். புகார் நகரில் புகுந்தவன் இதுவரை நடந்த இந்தச் செய்திகளைத் தகுந்தவர்க்கு எல்லாம் எடுத்துச் சொல்ல அவ் அறிவிப்புகள் பலரை உயிர் விடச் செய்தன; சிலரைத் துறவிகள் ஆக்கின; துயரத்தைப் பெருக்கின. கோவலன் தந்தை தம்பால் உள்ள பொருளை உலகினர்க்கு அளித்து வாழ்க்கையை